எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர் என்று திருத்தணியில் பேட்டி அளித்த சசிகலா கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இன்று சசிகலா தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலாவிற்கு பல்வேறு இடங்களில் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், திருத்தணியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சசிகலா கூறியதாவது:- அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்.
தொண்டர்கள் வரவேற்பு சிறப்பாக உள்ளது. அதிமுகவின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரி செய்யப்படும். இது எங்களுக்குள் உள்ள பிரச்சினை இதை நாங்கள் சரி செய்வோம். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒரு தலைமையின் கீழ் அதிமுக நிச்சயம் வரும்.
திமுகவை எங்களது எதிரியாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக ஏழை எளியோர்களுக்கான கட்சி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2-வது முறையாக ஏற்பட்டுள்ள சிக்கலை நிச்சயம் சரி செய்வோம். அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்வேன். என்னுடன் அதிமுகவின் தொண்டர்களும் மக்களும் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.