அழகிய பெரியவன்
உலகின் ஒவ்வொரு மொழியிலும் தலைமுறைகளைக் கடந்து எழுதுகின்ற, அறிவுத் துறையுடன் இடையறாமல் தொடர்ந்து உரையாடி விவாதங்களையும் செல்நெறிகளையும் கட்டியெழுப்புகின்ற ஆளுமைகள் அரிதாகவே இருப்பார்கள். சில மொழிகளில் அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம். ஆனால் தமிழுக்கு அந்த நல்வாய்ப்பு எஸ்.வி.ராஜதுரை அவர்களின் மூலம் கிடைத்திருக்கிறது.
என்னுடைய பத்தொன்பது வயதில், 1987 ஆம் ஆண்டு முதன்முதலாக அவரது எக்சிஸ்டென்ஷியலிசம் நூலைப் படித்தேன். அப்போது நான் வேலூர் ஊரீசுக் கல்லூரியில் விலங்கியல் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். 1975 ஆம் ஆண்டில் வெளியாகியிருந்த எக்சிஸ்டென்ஷியலிசம் நூலை எனக்கு அப்போது வாசிக்கக் கொடுத்தவன் வகுப்புத் தோழன் இன்பகுமார். அன்று எனக்கு அறிமுகமான எஸ்.வி.ஆர் இன்றும் எனக்கு புதிய எழுத்துகளுடன் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்.
எக்சிஸ்டென்ஷியலிசம் நூலைத் தொடர்ந்து எனக்கு அவருடைய இந்து இந்தி இந்தியா நூலும் சில கட்டுரைகளும் வாசிக்கக் கிடைத்தன. எஸ்.வி.ஆர் என்ற பெரும் அறிவாளுமை எனக்குள் அழுத்தமாகப் பதிந்தது. இந்து இந்தி இந்தியா, ரஷ்யப்புரட்சி: இலக்கிய சாட்சியம் நூல்களின் மூலமாகத்தான். தொண்ணூறுகளில் பெரும்பாலும் இதழ்களில் வெளிவந்த அவருடையக் கட்டுரைகளை நான் தேடிவிரும்பிப் படித்தேன்.
எத்தனை நூல்களைப் படித்தாலுமே சிலருடைய நூல்களுக்கு மட்டும் மனதில் தனியிடம் இருக்கும். அதற்கு சில தனித்தக் காரணங்களுமுண்டு. எனக்கு அப்படி எஸ்.வி.ஆரின் நூல்களைப் பிடிக்கக் காரணம் அவரின் எளிமையும் துல்லியமுமான எழுத்து நடை. மிக அணுக்கமான நடை அது. அவருக்கு இலக்கியவாதியாக வேண்டும் என்ற வேட்கை இருந்திருக்கிறது. சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். ஆனால், ஒரு தருணத்தில் முழுக்கவும் அரசியல் எழுத்து என்று தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்.
ஒருவேளை அவர் தமது அரசியல் எழுத்துகளோடு புனைகதைகளையும் இணையாக எழுதியிருந்தால் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருப்பார். கவிதைக்கும், தத்துவார்த்த தெறிப்புகளுக்கும் சென்று மீளும் சொல்முறையை உடையவர் அவர். கோட்பாடுகளையும், தத்துவங்களையும், கடுமையான மார்க்சிய நூல்களையும் பேசினாலும் அவர் எழுத்துகள் எளிதாகப் புரியும் வகையிலேயே இருக்கின்றன.
எஸ்.வி.ஆரின் மொழிபெயர்ப்பு நூல்களில் எனக்கு ஈடுபாடு உண்டு. குறிப்பாக வ.கீதா அவர்களுடன் இணைந்து செய்த கவிதை மற்றும் சிறுகதை மொழியாக்கங்கள். அன்னா அக்மதோவா கவிதைகள். மண்ணும் சொல்லும்-மூன்றாம் உலகக் கவிதைகள். இறக்கை முளைத்த விதி. மூன்று நூல்களுமே தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கான புதுப்பார்வையையும், உத்வேகத்தையும் அளித்தவை என்றால் மிகையில்லை. தொண்ணூறுகளின் தொடக்க ஆண்டுகளில் தமிழுக்கு முதன் முதலில் அறிமுகமான அன்னா அக்மதோவா, துயரத்தின் ரேகைகளையே சுருக்கங்களாக் கொண்ட முகத்தோடு, ஸ்டாலினிய அடக்குமுறையின் கொடூரங்களை
“இத்தகைய துயரம்
மலைகளுக்கு கூனல் விழச்செய்து விடும்”
என்று தன் கவிதைகளால் சொல்லியபடி பகிர்ந்து கொண்டார்.
மண்ணும் சொல்லும்-மூன்றாம் உலகக் கவிதைகள்- கவிஞரின் மனசாட்சியின் பிரதி பிம்பமே சொல். வரலாற்றின் பதிவுகளைப் பெறாத சொற்கள் கவிதைகளைப் படைத்தாலும் அந்தச் சொற்களால் எந்தவொரு பயனுமில்லை; கவிஞரை வரலாற்றுடன் இணைக்கவே சொல் பயன்பட வேண்டும்- என்ற அறிமுகத்தோடு அடக்குமுறைகளுக்கு எதிராக எழுதிய எண்பத்தைந்து கவிஞர்களின் கவிதைகளை தமிழுக்கு வழங்கியது. அந்த நூல், நூலாசிரியர்களால் இன்குலாப், க.வில்வரத்தினம், சோலைக்கிளி, பா.தேவேந்திர பூபதி ஆகியோருக்கும், எனக்கும் நினைவாக அளிக்கப்பட்டிருப்பதால் மேலும் எனக்கு விசேடமானது!
எஸ்.வி.ஆரின் தத்துவார்த்தப் பார்வை
எஸ்.வி.ராஜதுரை கவிதை, இசை, ஓவியம், நாவல், நாடகம், திரைப்படம் என்று கலை இலக்கியத்தின் அத்தனை வகைமைகளையும் விட்டுவைக்காமல் எழுதியிருக்கிறார். அவருக்கு கால்பந்து பிடிக்கும் என்பதால் அந்த விளையாட்டைப் பற்றியும் கூட எழுதியுள்ளார். அவரது பரந்த எழுத்துகளில், ஒப்பீட்டளவில், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் குறைவாகவே எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை குறைவாக இருந்தாலும் ஆழமும், விரிவும் கொண்டவையாகவும், முழுமையான பார்வையை அளிப்பவையாகவும் இருக்கின்றன.
எஸ்.வி.ஆரே குறிப்பிடுவது போல், அவருடைய கலையிலக்கிய கட்டுரைகள், ஒரு பொதுவான மார்க்சியப் பார்வையிலிருந்து எழுதப்பட்டவை. எந்தக் கறாரான அதிநவீன கோட்பாட்டுச் சட்டகத்தையும் புகுத்தாதவை. ஆனாலும் மிக நேர்மையான மார்க்சியப் பார்வையைக் கொண்டவை.
தலையை பாறையில் மோதவிட்டு நட்சத்திரங்களைப் பார்த்தவன் என்றே தன்னுடைய கோட்பாட்டரசியல் நம்பிக்கையைப் பற்றி கவித்துவமாகக் குறிப்பிடுகிறார் எஸ்வி.ஆர்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உண்டான கம்யூனிச போராட்டங்கள் அவருக்கு மகிழ்ச்சியையும், அயர்ச்சியையும் மாறி மாறி கொடுத்து வந்திருக்கின்றன. சோவியத் ரஷ்யாவின் மாற்றம் அவரை வெகுவாக பாதித்திருக்கிறது. அவருடைய கலையிலக்கிய விமர்சனத்தில் இந்த பாதிப்பும் கவலையும் வெளிப்படுகின்றன. இந்த மனோநிலையின் வெளிப்பாடாக கோட்பாடுகளின் தவறுகளையும், கோட்பாட்டு செயல்முறையின் தவறுகளையும் சாடாமலோ, விமர்சிக்காமலோ அவருடைய எழுத்துகள் ஒருபோதும் மௌனம் காத்ததில்லை.
மார்க்சிய விவாதங்களுக்கு தமிழில் கட்டாயம் படிக்கவேண்டிய எழுத்துகளாக இன்று எஸ்.வி.ஆருடையவை இருக்கின்றன. குறிப்பாக லெனினிய, ஸ்டாலினிய விமர்சனங்கள், இந்திய சாதிய அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான விமர்சனங்கள் அவருடைய எழுத்துகளில் விரவிக்கிடக்கின்றன. இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் ஆதரவாளராக அவர் இருந்தபோதும் ஸ்டாலினியத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனாலேயே, ரஷ்யப்புரட்சி: இலக்கிய சாட்சியம் என்கிற அவருடைய நூல் உருவாகியிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. தான் ஆழமாக வைத்திருக்கும் ஒரு நம்பிக்கையின் பலவீனத்தை பரிசீலிக்கின்ற அவரின் நேர்மையான முயற்சி அந்நூல்.
இலக்கியவாதிகள் மற்றும் இலக்கியங்களின் வழியே, ரஷ்யாவில் ஏற்பட்ட கம்யூனிச புரட்சியின் நம்பிக்கை தொடங்கி அதன் சிதைவுக்குக் காரணமாகிய பெரெஸ்த்ரொய்கா வரையிலான வரலாற்றை விரிவாக பதிவு செய்கிற இந்த நூல் தமிழில் ஓர் அரிய சாதனை!
நமது கோளத்திற்குப் புதியதோர்
ஒளிர்மிகு பாதை வகுப்போம்
………………..
ஒவ்வொருவனும் நாங்களே, ஒவ்வொன்றிலும் நாங்களே
தீப்பிழம்பும் வெற்றிச்சுடரும் நாங்களே
நாங்களே எங்கள் தெய்வம், நீதிபதி, சட்டம் (கிரில்லோவ், 1917)
என்று ரஷ்யப் புரட்சியைப் பாடிய கவிஞர்களும் எழுத்தாளர்களும்
மனிதன் வீழ்ச்சியடைகையில்
முன்னேற்றம் யாவும் பிற்போக்கானதே
….வாழ்க்கையில் பொருட்படுத்தக் கூடியது மானுட ஜீவியே
தொழில் நுட்பமும் அதிகாரமும் நிலைத்து நிற்காதவை
பூமியில் நீடித்து நிற்கக் கூடியது
மறைந்துபோன நட்சத்திரங்களின் மினுக்கத்தைப் போன்ற
ஒரு நிலையான பிரகாசம்
அதை ஆன்மாவென்று அழைத்தோம் யாம்! (ஆந்திரே வோழ்னெஸ்ஸென்ஸ்கி, 1982)
என்று மனிதத்தையும் ஆன்மீகத்தையும் பாடும் நிலைக்கு தள்ளப்பட்ட ஸ்டாலினிய அடக்குமுறைகளையும், கண்ணீர் நிரம்பிய காலத்தையும், நம்பிக்கை சிதைவையும் துல்லியமாகவும் உயிர்ப்புடனும் ரஷ்யப்புரட்சி: இலக்கிய சாட்சியம் பதிவு செய்திருக்கிறது.
ஜோசப் ஸ்டாலின் ஆட்சியில் அன்றாட பிரச்சினைகளையும், சித்தாந்த, அறவியல், கலை தொடர்பான சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது மட்டுமல்லாது உயிர் பிழைத்திருப்பதுவே பெறும் முயற்சிதான் என்று சொல்லும் அளவுக்கு துன்பப்பட்ட அன்னா அக்மதோவா, போரிஸ் பாஸ்டர்நாக், ஓசிப் மண்டெல்ஷ்டாம், மாயாகோவ்ஸ்கி, செர்ஜி யெசினின், போரிஸ் பில்நியாக், ஐசக் பேபல், எவ்கனி ஜாமிடியான், கான்ஸ்டான்டின் ஃபெடின், மரினா ஸ்வெடேய்வா, சல்ஸனித்சின், க்ராஸ்மன் உள்ளிட்ட பல இலக்கியவாதிகளைப் பற்றிய செய்திகளையும், அவர்களின் படைப்புகளின் அறிமுகத்தையும் இந்தநூல் கொடுக்கிறது.
ரஷ்யாவில் விவாதிக்கப்பட்ட சோசலிச யதார்த்தவாதத்துக்கு இணையான பியூச்சரிசம், உருவவியல், கன்ஸ்ட்ரக்டிவிசம், சிம்பலிசம் உள்ளிட்ட கலைப்பாணிகளைக் குறித்த சிறந்த அறிமுகங்களையும் தருகிறது. ஒரு இலக்கியப் படைப்போ அல்லது கலைப்படைப்போ ஒரு அரசுக்கும் கோட்பாட்டுக்கும் (கட்சிக்கும்) சமுதாயத்துக்கும் அச்சுறுத்தலாக இருந்துவிடும் என்று நம்புவது ஓர் அறியாமை. பல்வேறு கோணங்களில் கொள்கையையும் (கட்சி), அரசையும், அரசாங்கத்தையும் விமர்சித்து ஆழமான அறவியல் கேள்விகளை எழுப்பும் படைப்புகளை வரவேற்கவேண்டும் என்பது இந்த நூலின் வழியே வெளிப்படும் எஸ்.வி.ராஜதுரையின் அழுத்தமான பார்வை.
எஸ்.வி.ஆரின் அரசியல் பற்றுறுதி என்பது மார்க்சியத்துடன் நின்றுவிடுவது மட்டுமன்று. உலகளாவிய நோக்கில் எவையெல்லாம் மனிதருக்கு விடுதலையை வழங்கிடும் கோட்பாடுகளாக இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் தன்னுடைய பார்வையாக வரித்துக்கொள்கிற அரசியலாகவும் விரிவடைவது. அந்த வகையிலேயே அவர் பெரியாரியத்தையும், அம்பேத்கரியத்தையும் தனது சித்தாந்த அடித்தளமாகிய மார்க்சியத்துடன் இணத்துக் கொள்கிறார்.
எஸ்.வி.ஆரின் அணுகுமுறை
எஸ்.வி.ஆரின் இலக்கியக் கட்டுரைகளில் ஒருசிலதைத் தவிர எல்லாமே விரிவான கட்டுரைகள். நாடகத்தைப் பற்றியோ, இசையைப் பற்றியோ, ஓவியத்தைப் பற்றியோ, எதை எழுதினாலும் அதன் கிளைகள் மற்றும் பக்கத் தொடர்புகளுடன் இணைந்த முழுமையை தன்னுடைய கட்டுரைகளில் அவர் கொடுத்துவிடுகிறார். ஒரு எழுத்தாளரையோ கவிஞரையோ எழுதும் போது, அவருடைய படைப்புலகத்தையும், நூல்களையும் முழுமையாகத் தருகிறார். அவர் எழுதும் படைப்பாளியைப் பற்றிய தெளிவான புரிதலை இதுதருவதோடு, அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளரின் ஆக்கங்களைத் தேடிப்படிக்கவும் வகைசெய்கிறது.
நவீன நாடகங்கள் குறித்து அவர் எழுதியுள்ள- தலைநகரில் நாடக இயக்கம், ஒரு தூண்டுதலின் விளைவாக, கலையும் சமூக உணர்வும், மெடியாவும் மணிமேகலையும்- ஆகிய கட்டுரைகளை சேர்ந்தார் போல வாசித்தால், தென்னிந்திய நவீன நாடக வரலாறும் போக்கும் ஒருவருக்கு பிடிபட்டுவிடும். இக்கட்டுரைகள் வெறும் செய்திச் சேகரமாக மட்டும் இருப்பதில்லை. அவரின் வலுவான ஊடாடலைக் கொண்டவையாகவும் உள்ளன.
பழமையை மீட்டெடுக்கிறோம் என்ற அறைகூவலில் மீண்டும் பழமைவாதக் கருத்துகளையே நவீன நாடகங்களில் பொதிந்து தருவது அழுகிப்போன உள்ளடக்கத்தை வைத்துக் கொடுப்பது. பழமையின் வடிவங்களில் தேவையானவற்றை வைத்துக்கொண்டு புதிய உள்ளடக்கங்களை உருவாக்கிட பழமையை செரித்து அதை புதுமைக்குப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் எஸ்.வி.ஆர். அவரின் இந்தக் கருத்து பிற இலக்கிய வகைமைக்கும் சேர்ந்ததுதான்.
ந.முத்துசாமியின் நவீன நாடகங்களைப் பற்றிய கூர்மையான விமர்சனத்தில் இந்தக் கருத்தின் துல்லியத்தை காணலாம். தனித்துவம், உன்னதம் என்று கூறும்போது, உயர்ந்து நிற்பது என்றே முத்துசாமி புரிந்துகொள்கிறார். ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்து படிந்து பல அடுக்குகளைக் கொண்ட சிக்கலான சித்திரம் எழுப்புவதை அவர் உன்னதம் எனக் கொள்கிறார். ஆனால் எளிமையும், அடுக்குகளற்ற தன்மையும், முற்போக்குத் தன்மையும் வாய்ந்ததுமான படைப்புகள் மிக உன்னதமானவையாக உள்ளன என்கிறார் எஸ்.வி.ஆர். இந்த இருவகையான பார்வைகளும், அவற்றின் விமர்சன மோதலும் தமிழ் இலக்கிய உலகில் இன்றளவிலும் தொடர்ந்து வந்தவண்ணமே உள்ளன. உன்னதங்களாக முன்வைக்கப் படுபவற்றில் உண்மையைச் சிதைக்கிற, அல்லது குழப்புகிற தந்திரங்களே அதிகளவில் பொதிந்து கிடக்கின்றன.
தமிழ் இலக்கியப் பீடங்களில் தமது இடங்களைக் விடாப்பிடியாக கைப்பற்றி வைத்திருக்கும் ஆளுமைகள் எவருக்கும் எஸ்.வி.ராஜதுரையின் இந்த விமர்சனம் பொருந்தும். ந.முத்துசாமியைத் தொடர்ந்து வெங்கட்சாமிநாதன், க.நா.சு, அசோகமித்ரன், சுந்தர ராமசாமி ஆகியோரைப் பற்றிய எஸ்.வி.ஆரின் அவதானிப்புகள் துல்லியமானவை. அவர் இவர்களின் பங்களிப்புகளை எங்கும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், தன்னுடைய விமர்சனத்தை வைக்காமல் அவர்களைக் கடந்து போகவுமில்லை.
சுந்தர ராமசாமியின் சிறுகதைகளைக் குறித்த கட்டுரையில், அவருடைய கதைகளை அழகியல் பூர்வமானதென சிலாகிக்கும் எஸ்.வி.ஆர், ஐம்பதாண்டுகளாக ஏறத்தாழ ஒரே விஷயத்தையே திரும்ப எழுதியவர் சுந்தர ராமசாமி என்று வரையறை செய்துவிட்டு, தமிழ் உரைநடைக்கு சிறப்பு சேர்த்தவர் என்ற மதிப்பீட்டை வழங்குகிறார்.
தனது தரப்பு வாதங்களை முன்வைக்கவும், அதை உறுதிபடுத்தவும் நூற்றுக்கணக்கானோரை மேற்கோள் காட்டுவதும், அவர்தம் கருத்துகளை துணைக் கொள்வதும் எஸ்.வி.ஆரின் எழுத்தாக்க பாணியாகும். அவ்விதம் தரவுகளைக் கட்டியெழுப்பும் போது அவரால் அந்தப் பொருண்மையில் ஆழமாகச் செல்ல முடிகிறது. துணைத் தரவுகளின் மூலம் கருத்துத் தொடர்ச்சியையும் காட்டமுடிகிறது.
எரியும் வண்ணங்கள் நூலுக்கு எழுதப்பட்ட ஒரு சிறு அணிந்துரையில் கூட அவருக்கு டோமியர், கோயா, பொட்டிஸெல்லி, ரெம்ப்ராண்ட், லியானார்டோ டாவின்ஸி, மைக்கலேஞ்சலோ, பிக்காசோ, போலக் என எட்டு ஓவியர்களையும் அவர்களின் ஓவியங்களையும் துணைக்கழைத்துக் கொண்டே புகழேந்தியின் ஓவியங்களைப்பற்றி பேசமுடிகிறது. இந்தத் தன்மை மிக இயல்பாகவே பரந்துபட்ட அளவில், உலகளாவிய நோக்கில், நம் மொழியின் படைப்புகள் எந்த இடத்தில் நிற்கின்றன? அவை விலகும் புள்ளிகள் என்ன? இணையும் புள்ளிகள் எவை? என்றெல்லாம் நிலைக்கண்ணாடியைப் போல வைத்துப் பார்த்துக் கொள்ள உதவுகிறது. இந்த சுயம்பார்த்தலின் வாய்ப்பை தமிழுக்கு எஸ்.வி.ஆர் ஓயாமல் வழங்கிக்கொண்டே இருக்கிறார்.
எஸ்.வி.ஆரின் விரிவான வாசிப்பு பிரம்மிப்பூட்டுகிற ஒன்று. முழுமையானதும், நுட்பமானதும், சங்கிலித் தொடர் போன்றதுமான அந்த வாசிப்பு கடும் உழைப்பை கோருகிற ஒன்று. இந்தப் பரந்துபட்ட வாசிப்பின் மூலமாக அவர் உலகளாவிய தன்மையில் பல்வேறு படைப்பாளிகளுடனும் கோட்பாட்டியலாளர்களுடனும் உரையாடல் நிகழ்த்துகிறார். எனவே உறுதியான மார்க்சியர்கள் பார்க்கத் தயங்குகிற இடத்துக்கும், சுதந்திரமானதொரு பார்வைக்கும் வந்துசேர்கிறார். மார்க்சியத்தின் உண்மையான மனசாட்சியாக விளங்குகிறார்.
எஸ்.வி.ஆரின் விரிவான பார்வையில் எழுத்தாளர்கள்
எஸ்.வி.ஆரின் வாசிப்பின் பெரும்பகுதியை ஆங்கில நூல்கள் எடுத்துக் கொள்வதால் அவரின் இலக்கியத் தேர்வுகள் மிகவும் பரந்திருக்கின்றன. அவரின் அரசியல் பார்வை மார்க்சியத்தின் பார்பட்டதாக இருப்பதால் அவர்களில் நிறையபேர் ரஷ்ய எழுத்தாளர்களாவும் கவிஞர்களாகவும் உள்ளனர் என்பது இயல்பு.
சோரன் கீர்க்கெகார்ட், நீட்ஷே, ஹைடெக்கர், மார்டின் ப்யூபர், நிக்கோலாய் பெர்டியேவ், ழான் பால் சார்த்தர், செர்ஜி யெசினின், எவ்கனி ஜாமியாடின், மரினா ஸ்வெடெய்வா, சோல்ஸனிட்ஸின், மாயாகோவ்ஸ்கி, அன்னா அக்மதோவா, தாஸ்தயேவ்ஸ்கி, சரமாகோவ், போரிஸ் பாஸ்டர்நாக், காஃப்கா, கூகி-வா-தியாங்கோ, ஜார்ஜ் ஆர்வெல், தஸ்லிமா நஸ்ரின், சரமாகோ என்று நீள்கிறது அந்தப்பட்டியல். இதில் முதல் ஆறுபேர் தத்துவவாதிகள்.
ஸ்டாலினின் செயல்களுக்கு மூலகாரணமே லெனின்தான் என்று சொன்ன சோல்ஸனிட்ஸினின் நூல்களான முதல் வட்டம், கேன்சர் வார்டு, ஆகஸ்டு 1914, குலக் தீவுக்கூட்டம் ஆகியவற்றை முன்வைத்து ஒருகட்டுரையில் விரிவாகப் பேசும் எஸ்.வி.ஆர், சோல்ஸனிட்ஸினுடைய ’எதிகல் சோசலிசம்’ என்ற நிலைப்பாட்டின் போதாமையை ஏற்க மறுக்கிறார். ஆனால் அவரை நிராகரிக்க தேவையில்லை, ஏனெனில் ஸ்டாலின் கால ரஷ்யாவைக் காட்டும் முப்பட்டகம் சோல்ஸனிட்ஸின் என்கிறார்.
வாழ்க்கையை உவகையுடன் பார்த்தல், இயற்கை நேயம், தன் ஆன்மீகம் (கிறித்தவம்), சகோதரத்துவம், மனித மனதின் அடிப்படைப் பண்புகள், உணர்வெழுச்சிகள், படைப்பாற்றல், சிந்தனை சுதந்திரம் ஆகிய கூறுகளைக் கொண்டவையாக நோபல் பரிசு பெற்ற ரஷ்யக்கவிஞர் போரிஸ் பாஸ்டர்நாக்கின் படைப்புலகம் இருக்கிற தென்கிறார் எஸ்.வி.ஆர். விசாரணை நாவலை முவைத்து காஃப்காவைப் பற்றி எழுதும்போது, அடிபணிந்து ஒரு நாயைப்போல ஊர்ந்து செல்ல மறுப்பது, தலை நிமிர்ந்து சுதந்திரத்தை நோக்கி நடந்து செல்வதற்கு எடுத்துவைக்கப்படும் முதல் அடியாகும், இதுதான் காஃப்கா சொல்லும் விடுதலையின் செய்தி என்று அவரின் உலகத்தை காட்டுகிறார்.
கம்யூனிச எதிர்பிரச்சாரத்துக்கு துணையாய் பயன்படுத்தப்பட்ட விலங்குப் பண்ணை, 1984 என்கிற ஜார்ஜ் ஆர்வெலின் இரண்டு நாவல்களை மறுவாசிப்பு செய்யும் எஸ்.வி.ஆர், மனிதனின் எதிர்ப்பு ஆற்றலில், மனோதிடத்தில், மனித சுதந்திரத்தில், உழைப்பவர்களின் மீதான நம்பிக்கையில் அந்த இரண்டு நாவல்களும் உட்கிடையான செய்திகளைக் கொண்டுள்ளன என்பதை வெளிக் கொணர்கிறார். கூகி-வா-தியாங்கோவைப் பற்றின கட்டுரை விரிவானதொரு அறிமுகக் கட்டுரையாக இருப்பதுடன் ஆப்ரிக்க நாடுகளை அடிமைபடுத்திய ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகளைப் பற்றியும், மொழியையும், மதத்தையும் ஐரோப்பிய நாடுகள் எவ்விதம் அடக்குமுறை கருவிகளாக்கின என்பதையும் சித்தரிக்கிறது.
தாஸ்தயெவ்ஸ்கியை குறித்து எஸ்.வி.ஆர் எழுதியிருப்பது தமிழுக்கு முற்றிலும் புதிய தரவுகளையும் கண்ணோட்டத்தையும் வழங்குவதாகும். பணமும், அதிகாரமும் மனிதர்களை எவ்விதம் ஆட்டிப்படைக்கின்றன என்பதே தாஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துச்சாரமாக இருக்கிறது என்று சொல்லும் எஸ்.வி.ஆர், அவரின் எழுத்தில் இருக்கும் சேடோ-மேசோகிஸ்டிக் தன்மையையும், விமர்சன யதார்த்தவாத தன்மையையும் வெளிக்கொணர்கிறார்.
மிகையில் பக்தின் விமர்சன நூலின் துணையோடு தாஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் ‘பலகுரல் தன்மை’ இருக்கிறது என்று நிறுவும் எஸ்.வி.ஆர், ஒருபுறம் யதார்த்த உலகில் உள்ள விவகாரங்களைக் கண்டு வெறுப்பும் சினமும் – மறுபுறம் வைதீகக் கிறிஸ்துவத்தில் துன்பங்களுக்குத் தீர்வு காணுதல், இதுதான் தாஸ்த்தாயெவ்ஸ்கி என்கிறார். அதோடு நிற்காமல் தாஸ்தயெவ்ஸ்கியிடம் இருந்த யூத, இஸ்லாமிய வெறுப்பையும் எஸ்.வி.ஆர் அதிர்ச்சிகரமாக முன்வைக்கிறார். தமிழில் தாஸ்தயெவ்ஸ்கியைச் சுற்றிலும் எப்போதும் சூழ்ந்திருக்கும் பனிமூட்டமான கருத்துகளுக்கு இடையே எஸ்.வி.ஆரின் இந்தப் பதிவுகள் தெளிவான கீற்றுகளாகத் தெரிகின்றன.
மானுடத்தின் பக்கம் நின்று
எஸ்.வி.ஆரின் இலக்கியத் தேர்வுகளும், விமர்சனப் பார்வையும் வெறும் ரசனையையும், எழுத்தில் கைகொள்ளப்படும் உத்திமுறைகளையும் மட்டுமே வியந்து பார்க்கின்றவைகளாக இல்லை.
படைப்பின் தரம், வடிவத்துக்கும் உள்ளடக் கத்துக்குமான கச்சிதமான இயைபு சாத்தியப்படுத்திய புரிதல், படைப்பில் தொழிற்படும் உலகப்பார்வை, அரசியல் நோக்கு நிலை, சமூக அக்கறை, இலக்கிய அமைதி, மானுட விடுதலை கைவரப்பெறாத ஒரு சூழலில் அதனை வென்றெடுக்க படைப்பாளிகள் மேற்கொள்ளும் தேடல்கள், மானுட மாண்பு சிதைக்கப்படுவதன் சமூக அரசியல் பின்னணி, இந்தச் சிதைவுகளைக் கடந்து வரத்துடிக்கும் படைப்பாற்றல், அதிகாரத்திடம் உண்மையை உரைக்கும் துணிச்சல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவை நிகழ்கின்றன.
அவர் அறிமுகம் செய்யும் படைப்புகளில் எப்போதுமே ஒரு கலக அழகியல் தொணிக்கிறது.
தஸ்தயெவ்ஸ்கியைப் பற்றிய கட்டுரையில், ‘பணம் என்பது நாணயமாக வார்க்கப்பட்டுள்ள சுதந்திரம்’ என்ற அவருடைய படைப்பின் வரியிலிருந்து தொடங்குகிறார் எஸ்.வி.ஆர். அவர் தேர்ந்தெடுக்கும் மேற்கோள்கள் அந்தப் படைப்பாளியின் அடையாளத்தை கடத்திவிடுவதாக உள்ளன.
பொதுவாக புத்திஜீவிகளிடையே இருக்கும் ஆங்கில வாசிப்பு என்பது மேற்கத்திய உலகை நோக்கியே இழுத்துச் சென்றுவிடுகிறது. தாம் நிலைகொண்டிருக்கும் மண்ணின் ஆதாரங்களையும் சிக்கல்களையும் நோக்கி அது திரும்புவதில்லை. இந்த நிலையை எஸ்.வி.ஆர் தமது அரசியல் எழுத்துகளில் தவிர்த்திருக்கிறார். இந்திய சாதிய சமூகம், இந்துத்துவ அரசியல் நிலைமைகள், பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் என்றெல்லாம் அது விரிகிறது.
ஆனால், அவரின் இலக்கிய கட்டுரைகளில் அவ்விதம் இல்லை. தமிழின் கலை பண்பாட்டு வெளிப்பாடுகளையும், மரபிலக்கியங்களையும் குறித்து எஸ்.வி.ஆர் இன்னும் கூடுதலாக விரிவாகப் பேசியிருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். தன் எழுத்துகளில், தரவுகளின் மூலம் கட்டியெழுப்பப்படும் உண்மைகளை மேலும் கூர்தீட்டி, புதிய இடங்களுக்கு நகராமலேயே சிலசமயம் நின்றுவிடுகிறார் என்றும் தோன்றுகிறது. இதில் வாசிக்கிறவர்கள் உருவாக்கிக் கொள்ளட்டும் என்று அவர் விட்டுத்தரும் பார்வையிருக்கிறது. அதே நேரத்தில் அவர் தவறவிட்ட சுயத்துடன் கூடிய தத்துவார்த்த புள்ளிகளும் இருக்கின்றன.
இதையெல்லாம் தாண்டி எஸ்.வி.ஆர் எனும் ஆளுமை மாபெரும் தமிழ் அறிவாளுமையாக தன் எழுத்துகளாலும் சிந்தனைகளாலும் எழும்பி நிற்கிறது. எப்போதும், எதிலும், எங்கும் மனிதாம்சத்தின் பக்கமாகவும், மனித மாண்பின் பக்கமாகவும், சுதந்திரத்தின் பக்கமாகவும் நின்று இடையறாது பூரணத்துவத்தோடு அது பேசிக் கொண்டேயிருக்கிறது.
*
குறிப்பு:
இம்மாதம் 24, 25 தேதிகளில் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், ‘தாராபுரம் தந்த இரு அறிவுக் கொடையாளர்கள்: தியோடர் பாஸ்கரன், எஸ்.வி.ராஜதுரை அறிவுப்பணி’ என்ற கருத்தரங்கத்தை நடத்தியது. தியோடர் பாஸ்கரன், எஸ்.வி.ராஜதுரை இருவரும் எண்பது வயதைக் கடந்தவர்கள். ஏராளமான விடயங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியவர்கள். இவர்களில் எஸ்.வி.ராஜதுரை கடும் உடல் உபாதைகளுடன், உடல்நலக் குறைவோடு இருக்கிறார்.
தீவிரமாக வாசிக்கிறவர்களைத் தவிர்த்த தமிழ்ப் பொதுச் சமூகம் இந்த இரண்டு ஆளுமைகளையும் அறிந்திருக்குமா என்பது சந்தேகமே. ஊடகங்களிலோ பொது வெளிகளிலோ இவர்களுடைய பெயரை உச்சரித்த யாரையும் நான் பார்த்ததில்லை. தமிழர்கள் தங்களிடையே இருக்கும் அறிவாளிகளை பொருட்படுத்துவதில்லை. இது வெட்கப்படவேண்டிய ஒன்று. இந்த நிலை மாற்றப்படவேண்டும்.
இக்கருத்தரங்கில் நான், எஸ்.வி.ராஜதுரை அவர்கள் எழுதிய இலக்கிய கட்டுரைகளைப் பற்றி கட்டுரை வாசித்தேன். எஸ்.வி.ராஜதுரை அவர்கள் மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய நோக்கில் ஏராளமான ஆய்வு நூல்களை தமிழுக்கு தந்தவர். வ.கீதா அவர்களுடன் இணைந்து பெரியாரைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதியவர். சமகாலத்தில் இருக்கிற தமிழின் மிகப்பெரிய அறிவாளர். தமிழ்நாடு அரசும், பல்கலைக்கழகங்களும் இவர்கள் இருவருக்கும் சிறப்புச் செய்யவேண்டும். அப்படிச் செய்வதன் வழியே இளந்தலைமுறைக்கு இவர்களைக் கடத்த வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“