அதிமுக நிச்சயம் ஒற்றை தலைமையின் கீழ் வரும் என வி.கே.சசிகலா தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே அண்மைக்காலமாக போட்டியே நிலவி வருகிறது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அரசியல் சுற்றுப்பயணமாக திருத்தணிக்கு சென்றிருக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அதிமுகவின் பொதுச்செயலாளரேதான் என கூறிக் கொண்டிருக்கும் வி.கே.சசிகலா அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:-
“எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு இதுப்போன்ற தலைமை பிரச்னை எழுந்தது. அப்போது அதனை சரியாக கையாண்டு சரி செய்யப்பட்டது. அதுபோல, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் தலைமை பிரச்னை எழுந்திருக்கிறது. இதையும் சரி செய்து மீண்டும் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து மக்களுக்கான ஆட்சியை கொடுப்போம்.
தற்போது அதிமுகவில் நிலவும் பிரச்னைகளை காண கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதை தொண்டர்களின் உறுதுணையோடு சரி செய்திட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்களிடையே, தொண்டர்களிடையே நல்ல வரவேற்பு எனக்கு இருக்கிறது. என் தலைமையில் கட்சி இருக்க வேண்டும் என்றே தொண்டர்களும் விரும்புகிறார்கள். என்னுடைய அரசியல் சுற்றுப்பயணம் நிச்சயம் வெற்றிப்பெறும். அதிமுக தொண்டர்களும், மக்களும் இருக்கிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிசாமி இடையேயான பனிப்போரை கொண்டு மொத்த அதிமுகவும் அப்படியே இருக்கும் என எண்ணிட முடியாது. இது எங்களுக்கும் இருக்கும் பிரச்னை. இதனை நாங்கள் சரி செய்வோம். அதிமுகவை கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. ஒற்றை தலைமையின் கீழ் நிச்சயம் அதிமுக வரும்.” என சசிகலா பேசியுள்ளார்.
ALSO READ:
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தைப் போல் தற்போது இபிஎஸ்-க்காக மாபெரும் எழுச்சி: ஆர்.காமராஜ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM