மதுரை: எம்ஜிஆர் எழுதிய உயிலின்படி, 80 சதவீத தொண்டர்கள் ஆதரிக்கும் நபரே அதிமுக கட்சியை வழிநடத்த முடியும் என, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறினார்.
இது தொடர்பாக மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ”திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் எம்ஜிஆர். இவரது தியாகத்தை மதிக்காமல் கருணாநிதி கட்சியைவிட்டு நீக்கினார். அண்ணா தொடங்கிய இயக்கத்திற்கு எதிராக புதிய கட்சி தொடங்க எம்ஜிஆர் யோசித்தார். ஆனாலும் மக்கள் வெகுண்டு எழுந்தனர். திமுகவினர் கரை வேட்டி கட்ட முடியாத சூழல் உருவானது.
இந்நிலையில்தான் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார். தான் நேசித்த அண்ணா பெயரை கட்சியிலும், அவரது படத்தை கட்சிக் கொடியிலும் இணைத்தார். இதுவரை இவ்வியக்கம் 31 ஆண்டு ஆட்சியில் இருந்துள்ளது. இக்கட்சியை அழித்துவிடலாம் என, சிலர் நினைக்கின்றனர். ஒருபோதும் நடக்காது.
எம்ஜிஆர் பேச முடியாத நிலையில், கடந்த 1984, 1986 ஆகிய ஆண்டுகளில் கட்சி குறித்து உயில் ஒன்றை எழுதி வைத்தார். அதில், 80 சதவீத அதிமுக தொண்டர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர் தான் இயக்கத்தை வழிநடத்தவேண்டும் என, குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அதிமுக என்றைக்கும் தொண்டர்கள் இயக்கமாகவே இருக்கும்.
தற்போது, கட்சிக்குள் ஏற்பட்டுள்ளது உரிமை பிரச்சினை. இது தொடர்பான சலசலப்புகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். திமுகவை அழிக்க தொடங்கிய அதிமுக இன்னும் 100 ஆண்டு காலத்திற்கு மக்கள் பணியாற்றுவோம் என்ற ஜெயலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்.
எம்ஜிஆர், ஜெயலலிதா மீது பாசம் வைத்துள்ள தொண்டர்கள் வேறு கட்சிக்கு போகமாட்டார்கள். தொண்டர்கள் விரும்பும் தலைமை நிச்சயம் வரும். தொண்டர்கள் அமைதி காக்கவேண்டும். சாதி, மத வேறுபாடு இல்லாத இந்த இயக்கம் நாயரை (எம்ஜிஆர்,) பிராமணப் பெண்ணை (ஜெ) தலைமையாக கொண்டு பீடு நடைபோட்டது. தமிழக மக்களுக்காக இந்த இயக்கம் தொடர்ந்து பாடுபடும்.” இவ்வாறு செல்லூர் கே.ராஜூ கூறினார்.