திருவள்ளூர்: “என்னைப் பொருத்தவரை, கட்சித் தொண்டர்களும், வாக்களிக்கும் பொதுமக்களும்தான் தலைவரை தீர்மானிப்பார்கள். அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அதனால், நிச்சயமாக இதை சரிசெய்து, மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டு வருவேன். அது ஏழைகளின் ஆட்சியாக, மக்களின் ஆட்சியாக இருக்கும்” என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா இன்று, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து, அதிமுக தொணடர்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். திருவள்ளூர் மாவட்டம் குண்டலூர் பகுதியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்: “அதிமுகவை நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் ஆரம்பிக்கும்போதே இது ஏழை எளியவருக்கான இயக்கம். சாதி மத பேதமில்லாத இயக்கம். இந்த இயக்கத்தை எம்ஜிஆர், ஏழைகளின் ஆட்சியாகவே கொடுத்து, அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், ஏழைகளுக்காகவே வாழ்ந்தார். அவர்களுக்கான நல்ல திட்டங்களை வகுத்துக் கொடுத்தார். அவரது மறைவுக்குப் பின்னர், இந்த இயக்கத்தை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதனால், என்னுடைய சுற்றுப்பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன். அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான். அதுதான் உண்மையாகவே மக்களுக்கான ஆட்சி. அதுவும் ஏழை, எளியவர்களுக்கான ஆட்சி. குறிப்பாக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பெண்களுக்காக பல திட்டங்களை வகுத்து அது நடைமுறைப்படுத்தினார்.
தற்போது நான் வரும் வழியில் என்னைப் பார்க்கும் பெண்கள் பலரும் கூறுவது, இந்த ஆட்சியில் எதுவுமே எங்களுக்கு செய்யவில்லை. ஜெயலலிதா அறிவித்த தாலிக்கு தங்கம் கொடுக்கவில்லை. எனவே நீங்கள் வந்தால்தான், இங்கு பெண்களுக்கும் ஒரு பாதுகாப்பு இருக்கும் என்று வலியுறுத்துகின்றனர். நிச்சயமாக அதிமுக ஆட்சியை அமைப்பேன். அது மக்களின் ஆட்சியாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
அதிமுகவில் தற்போது நிலவும் பிரச்சினை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ” அதாவது, கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, இதே போல் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அதை, என்னோட சின்ன வயதிலேயே பார்த்து வந்தவள். என்னைப் பொருத்தவரை, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக இந்த போராட்டம் அவர்களுக்குள் நடந்து கொண்டுள்ளது. இதையும் சரி செய்ய முடியும். ஏற்கெனவே, ஜெயலலிதாவுக்காக நாங்கள் சரிசெய்து, தமிழக மக்களுக்கு அதிமுகவின் ஆட்சியைக் கொடுத்து மக்களுக்கான திட்டங்கள் எல்லாம் செய்யப்பட்டது. என்னைப் பொருத்தவரை, கட்சித் தொண்டர்களும், வாக்களிக்கும் பொதுமக்களும்தான், அவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். அதனால், நிச்சயமாக இதை சரிசெய்து, மீண்டும் அதிமுக ஆட்சியைக் கொண்டுவருவேன். அது ஏழைகளின் ஆட்சியாக, மக்களின் ஆட்சியாக இருக்கும்.
அதிமுகவில் நிலவும் சூழலைப் பார்க்கும்போது மனநிலை ரொம்ப கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால், அதேசமயம், இதையும் சரிசெய்ய முடியும் என்கிற, தைரியம் எனக்கு இருக்கிறது. அதை நிச்சயம் செய்வேன். கட்சித் தொண்டர்களின் துணையோடு நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்றார்.
ஓபிஎஸ், இபிஎஸ் உடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இது எங்களுக்குள் இருக்கிற பிரச்சினை. இதை நாங்கள் சரிசெய்வோம். தொண்டர்கள் முழுவதும் என் தலைமையின் கீழ் கட்சி இருக்க வேண்டும் என்றுதான் ஆசைபடுகின்றனர். அப்படி இருந்தால்தான் இந்த இயக்கம் நன்றாக இருக்கும்.
திமுகவை எங்களுடைய எதிரியாகத்தான் பார்ப்போம். எங்கள் தலைவரால் உருவான கட்சிதான் திமுக. அண்ணா இருந்தபோது, எம்ஜிஆர்-தான் அந்த கட்சியின் உயிர். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, எம்ஜிஆரே ஒருவரை முதல்வராக கொண்டுவந்தார். அவர்தான் கருணாநிதி. அவருக்கே ஒருகட்டத்தில் எம்ஜிஆரின் வளர்ச்சிப் பிடிக்காமல், அவரையே வெளியே அனுப்பினார். அதன்பிறகு தொண்டர்கள் எல்லாம் சேர்ந்துதான் தலைவரை உருவாக்கினார்கள்.
கட்சியில் ஒருத்தர் இரண்டு பேருக்கு இடையில் நடக்கும் சண்டையை வைத்துக்கொண்டு, கட்சி முழுவதும் அப்படி உள்ளது என்று நினைக்கமுடியாது. ஒரு கல்யாண மண்டபத்துக்குள் இருக்கிற ஆட்கள் மட்டும் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக தொண்டர்களின் மனசுதான் என்றைக்குமே நிற்கும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அதிமுக ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் வரும். அந்த தேர்தலில் அதிமுக எந்தளவுக்கு வெற்றியை பெறப் போகிறது என்பதை அனைவரும் பார்க்கத்தான் போகின்றனர். நிச்சயம் அதை செய்வேன். தமிழகம் முழுவதும் இதேபோல சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்” என்று அவர் கூறினார்.