மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களான 40 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்க, அம்மாநில அரசியலில் புயல் வீசத்துவங்கியது. இதில், பல எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குழப்பச் சூழலில் மகாராஷ்டிரா அரசியலில் இன்று நிகழ்ந்த டாப் 10 சம்பவங்களின் தொகுப்பு இதோ!
1. ஏக்நாத் ஷிண்டே உறுதி
மகாராஷ்ட்ராவில் அடுத்த 2 நாட்களில் புதிய அரசு அமைக்க உரிமை கோருவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். தங்களது அணியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களின் குடும்பங்களுக்கும் மத்திய அரசின் பாதுகாப்பு வழங்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டே உறுதி அளித்துள்ளார்.
2. சஞ்சய் ராவத் காட்டம்
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆன்மாக்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தார். “அசாம் கவுகாத்தியில் 40 எம்.எல்.ஏ.க்கள் உயிருடன் பிணமாக உள்ளனர். அவர்களின் ஆன்மாக்கள் இறந்துவிட்டன. எம்.எல்.ஏ.க்கள் வந்ததும் பிரேதப் பரிசோதனைக்காக அவர்களின் உடல்கள் நேரடியாக சட்டப்பேரவைக்கு அனுப்பி வைக்கப்படும். இங்கு கொளுந்துவிட்டு எரியும் பிரச்சனையில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்” என்று கூறினார் சஞ்சய் ராவத்.
3. ஆதித்ய தாக்கரே விளாசல்
“கட்சியிலிருந்து வெளியேற விரும்புகிறவர்களுக்கும், திரும்பி வருபவர்களுக்கும் சிவசேனாவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால் துரோகிகளாக மாறிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள்” என்று மகாராஷ்டிர சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.
4. நீதிமன்றத்தை நாடிய அதிருப்தி எம்.எல்.ஏக்கள்
மகாராஷ்டிராவில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் பிறப்பித்த தகுதி நீக்க நோட்டீஸை எதிர்த்து சிவசேனா எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஷிண்டேவுக்குப் பதிலாக அஜய் சவுத்ரியை சிவசேனாவின் சட்டமன்றத் தலைவராக நியமிப்பதையும் எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
5. டிஜிபிக்கு மகாராஷ்டிர ஆளுநர் கடிதம்
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாநில டிஜிபிக்கு மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கடிதம் எழுதியுள்ளார். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மாநில அரசு திரும்பப் பெற்ற நிலையில், ஆளுநர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
6. ரணகளத்துக்கு நடுவே பிறந்தநாள் கொண்டாட்டம்
மராட்டிய மாநிலத்தின் பண்டாரா தொகுதி எம்.எல்.ஏ நரேந்திர போண்டேகர் தனது பிறந்தநாளை, அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். அவர் தங்கியுள்ள அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ராடிசன் ப்ளூ நட்சத்திர ஓட்டலில், சிவசேனா கட்சியின் முன்னாள் மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
#WATCH | Maharashtra’s Bhandara MLA Narendra Bhondekar’s birthday celebrated at the Radisson Blu Hotel in Guwahati in the presence of rebel Shiv Sena leader Eknath Shinde and other MLAs#MaharashtraPoliticalcrisis pic.twitter.com/rVq4GTkpGW
— ANI (@ANI) June 26, 2022
7. ஷிண்டே முகாமில் உயர்கல்வி அமைச்சர்
மராட்டிய மாநில உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வித் துறை அமைச்சராக உள்ள உதய் சமந்த் இன்று அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலை அடைந்து ஏக்நாத் ஷிண்டே முகாமில் சேர்ந்தார்.
8. மனம் மாறுகிறார்களா 20 பேர்? – திடீர் திருப்பம்
அதிருப்தி எம்.எல்.ஏக்களில் 20 பேர் முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரேவுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவுடன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஒருபுறம் இருக்க, ஏக்னாத் ஷிண்டே முகாமில் உள்ள அதிருப்தி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக அவர்களின் இலாகாக்கள் பறிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
9. உத்தவ் தாக்கரேவின் புதிய ரூட்
சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் மனைவியருடன் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தொலைபேசியில் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் கணவரிடம் பேசி அதிருப்தியை கைவிடச் செய்யுமாறு அவர் சமாதானப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
10. அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு
மத்திய பாதுகாப்பு முகமை உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அளித்ததன் அடிப்படையில் சிவசேனா கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, எம்எல்ஏக்களான ரமேஷ் போர்னாரே, மங்கேஷ் குடல்கர், சஞ்சய் ஷிர்சாத், லதாபாய் சோனாவனே, பிரகாச் சர்வே உள்ளிட்ட 15 பேருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM