’சரக்கடிச்சு தேடிக்காத நரகத்த..’ : போதைப்பொருளை ஒழிக்க கானா பாடல் தயாரித்த சென்னை போலீஸ்!

போதைப்பொருள் ஒழிக்க “கானா” பாடல் மூலம் விழிப்புணர்வை கையில் எடுத்துள்ள சென்னை காவல்துறை.
சென்னையில் போதைபொருள் விற்பனையை தடுக்கவும், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் சென்னை காவல்துறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை கண்காணிப்பதற்காக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆபரேஷன் கஞ்சா வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்கென குழு ஆரம்பித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை பிடிபட்ட 2 கோடி மதிப்பிலான 1300 கிலோ கஞ்சா மற்றும் 30 கிராம் ஹெராயின் மற்றும் பிரவுன் சுகர் உள்ளிட்ட போதைப் பொருட்களை நீதிமன்றம் அனுமதியுடன் நேற்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரிடையாக செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல் பாக்கம் கிராமத்தில் ரசாயன பொருட்களை எரிக்கும் இடத்தில் இந்த போதைப் பொருட்களை எரித்தனர். இதுபோன்று தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய போதைப் பொருட்களை அழிப்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
போதை பொருள் அழிப்பு நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு புறம் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு வகைகளில் சென்னை காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒருகட்டமாக சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறை உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் கஞ்சா மற்றும் போதை பொருட்களை தவிர்க்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டது.

மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள், பிரசிடென்சி கல்லூரி மாணவ மாணவிகள், லயோலா கல்லூரி மாணவ மாணவிகள், அரசு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மெரீனா கடற்கரையிலும், கல்லூரி ஆடிட்டோரியத்திலும் நடந்தது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரைப்பட பாடகர் கானா பாலா பாடிய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை குறித்த கானா பாடலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். போதை பொருட்களை தவிர்க்கும் விதமாக பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு சபேஷ் சாலமன் இசையமைத்துள்ளார். “விட்டு ஒழிக்கனும் கெட்டப்பழக்கத்தை கட்டி காக்கனும் நம்ம சமூகத்தை” என்ற தொடங்கும் இந்த விழிப்புணர்வு பாடலை வினோத் விஜய் என்பவர் எடிட் செய்துள்ளார். இந்த விழிப்புணர்வு பாடலை திருவல்லிக்கேணி காவல் மாவட்டம் தயாரித்துள்ளது. மேலும் விழிப்புணர்வு பாடலை பள்ளி, கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது சென்னை காவல்துறை.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, துணை ஆணையர் பகலவன், உதவி ஆணையர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் போதைப்பொருட்கள் மூலம் ஏற்படும் விளைவுகளை பற்றி பொதுமக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் எடுத்துரைத்தனர்.
ALSO READ: 
ஸ்கூலுக்கு போகச் சொல்லி வற்புறுத்தியதால் சங்கடம்.. 9ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.