சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டம்: முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் குறித்து நந்தனத்தில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பல்வேறு பயணிகளின் வசதிகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் குறித்து நந்தனத்தில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பல்வேறு பயணிகளின் வசதிகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இன்று (ஜூன் 26) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வழித்தடம் நான்கில் ஒரு பகுதியான கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26.1 கிலோ மீட்டர் பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

இந்த வழித்தட பகுதியில் தெள்ளியகரம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் நடைபெறும் வழித்தட கட்டுமானம், கரையான்சாவடி நிலையத்திற்கு அருகில் நடைபெறும் அடித்தள தூண்கள் மற்றும் அதன் இணைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் கோலப்பன் சேரியில் அமைக்கப்பட்டுள்ள வார்ப்பு மைதானத்தில் ‘யு’ கர்டர், ‘ஐ’ கர்டர் மற்றும் தூண் மூடிகள் வார்ப்பதற்கு முந்தைய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

> சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-2ல், வழித்தடம்-4ல் கலங்கரை விளக்கத்திருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படுகிறது.

> போரூர் புறவழிச்சாலை மெட்ரோ முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ வரையிலான 7.94 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட வழித்தடம் மற்றும் போரூர் புறவழிச் சாலை சந்திப்பு தெள்ளியகரம், அய்யப்பன் தாங்கல், பேருந்து பணிமனை, காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, முல்லை தோட்டம், பூந்தமல்லி பேருந்து நிலையம், பூந்தமல்லி புறவழிச்சாலை ஆகிய ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பூந்தமல்லி பணிமனை இணைப்பு ஆகிய பணிகள் வழித்தடம் 4-ல், இ.சி.வி 02 ஒப்பந்த தொகுப்பில் அடங்கும் எச்.சி.சி- கே.யி.சி கூட்டமைப்பு இந்த தொகுப்பின் ஒப்பந்த நிறுவனம் ஆகும்.

> இத்திட்டத்தில் பொதுமக்கள் சாலையில் பாதுகாப்பாக செல்வதற்கு வழித்தட பகுதி முழுமைக்கும், தடுப்பு பலகைகள் அமைத்தல், அடித்தள கட்டுமானம் இணைப்பு தூண்கள், தூண் மூடிகள் நிறுவுதல், யூ-கர்டர் நிறுவுதல் மற்றும் தொடர்புடைய பணிகள் அடங்கும்.

> இந்த திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு மொத்தம் 924 அடித்தள கட்டுமானங்கள் 154 இணைப்புகள் 116 தூண்கள் 31 தூண் மூடிகள் மற்றும் 29 யூ-கர்டர்கள் நிறுவுதல் போன்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

> வெளிவட்ட சாலை ஒட்டிய கோலப்பன் சேரியில் வார்ப்பு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தூண் மூடிகள் யூ-கர்டர்கள், ஐ-கர்டர்கள் வார்க்கப்படுகிறது. நகரத்தின் போக்குவரத்திற்கு இடையூறின்றி வார்க்கப்ட்ட கட்டுமான பொருட்கள் இரவில் எடுத்துச் செல்லப்பட்டு நிறுவப்படுகிறது.

> இத்திட்டத்தின் ஒரு பகுதியாக காட்டுப்பாக்கத்தில் இருந்து முல்லை தோட்டம் வரை 2.15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒருங்கிணைந்த பாதை மற்றும் மேம்பாலம், நெடுஞ்சாலைத்துறை பணிவுடன் இணைந்து அமைக்கப்படுகிறது.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் , அரசு முதன்மைச் செயலாளர்/ சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் (திட்டம்) த.அர்ஜுனன் பொது மேலாளர்கள் அசோக் குமார், ரேகா பிரகாஷ் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.