ஜீப் கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி| Dinamalar

இந்திய நிகழ்வுகள்

ஓடையில் ஜீப் கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி

பெலகாவி-கர்நாடகாவில் பெலகாவி அருகே, கூலித் தொழிலாளர்களுடன் சென்ற ஜீப், ஓடையில் கவிழ்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பெலகாவி மாவட்டம், அக்கடன்கியாரா ஹாலா கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள், வேலைக்காக நேற்று காலை அருகில் உள்ள கிராமத்துக்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட கிராமம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், பல்லாரி ஓடையில் கவிழ்ந்தது. இதைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.விபத்தில், 27 – 55 வயதுடைய ஆண் தொழிலாளர்கள் ஒன்பது பேர் உயிரிழந்தனர்; சிலர் லேசான காயங்களுடன் தப்பினர். மற்றவர்கள் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ‘வாகன ஓட்டுனரின் அதிவேகமும், அஜாக்கிரதையுமே விபத்துக்கு காரணம்’ என போலீசார் தெரிவித்தனர்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு உள்ளார். விபத்தில் உருக்குலைந்த ஜீப். இடம்: பெலகாவி.

தமிழக நிகழ்வுகள்

லஞ்ச வழக்கில் அதிரடி; ஜி.எஸ்.டி., ஆய்வாளர் கைது

மதுரை,-நிறுவன பதிவு சான்று வழங்க, 5,000 ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கரூர் ஜி.எஸ்.டி., ஆய்வாளர் சுபேஷ் சிங்கை, 47, மதுரை சி.பி.ஐ., அதிகாரி கள் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் புதிதாக துவங்கிய கம்பி வேலி உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் ஜி.எஸ்.டி., பதிவு சான்றுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்தார்.அவரை கரூர் ஜி.எஸ்.டி., பிரிவு அலுவலகத்திற்கு வருமாறு தொலைபேசியில் அழைத்தனர். அலுவலகத்திற்கு சென்ற அய்யப்பனிடம், சில பிரச்னைகள் இருப்பதால் நிறுவனத்திற்கான பதிவுச் சான்று வழங்குவதற்கு ஆய்வாளர் சுபேஷ் சிங், 10 ஆயிரம் லஞ்சமாக கேட்டார்.

இதற்கு அய்யப்பன் முடியாது எனக் கூறியதால், 5,000 ரூபாய் கேட்டு கட்டாயப்படுத்திஉள்ளார்.இதுதொடர்பாக அய்யப்பன், ஜி.எஸ்.டி., ஆய்வாளர் மீது மதுரை சி.பி.ஐ., அலுவலகத்தில் புகார் அளித்தார். சி.பி.ஐ., கண்காணிப்பாளர் கிருஷ்ணன் உத்தரவின் படி, கரூர் சென்ற அதிகாரிகள் குழுவினர், சுபேஷ் சிங் பணத்தை பெறும் போது மறைந்திருந்து கைது செய்தனர்.பின் அவரை மதுரை சி.பி.ஐ., நீதிமன்ற நீதிபதி தமிழரசி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

latest tamil news

அருவியிலிருந்து விழுந்த துணை தாசில்தார் இறப்பு

கள்ளக்குறிச்சி,-கல்வராயன்மலையில் அருவியில் குளித்த துணை தாசில்தார் தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், சந்தேப்பேட்டையைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சுந்தர், 35; திருக்கோவிலுார் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணிபுரிந்தார். நேற்று விடுமுறை என்பதால், சுந்தர் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கல்வராயன்மலைக்கு சென்றுள்ளனர். அங்கு கவியம் அருவியில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென தவறி தடாகத்தில் விழுந்துள்ளார். தடாகத்தில் விழுந்த அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளார். அவரது உடலை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இறந்த சுந்தருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும், ரேஷ்மிகா, 7; சுபிக்ஷா, 5, என இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

தனியார் நிறுவனத்தில் 22 பேர் கைது

புதுச்சத்திரம்,-தனியார் நிறுவனத்தில் இரும்பு திருடிய ஏழு பெண்கள் உள்ளிட்ட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 68; பெரியகுப்பம் என்.ஓ.சி.எல்., நிறுவன தொழில்முறை ஆலோசகர். இவர் நேற்று பணியில் இருந்தபோது, கம்பெனியில் புகுந்த மர்ம நபர்கள் இரும்பு பொருட்களை திருடுவது தெரிந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இரும்பு திருடியவர்களை மடக்கி பிடித்தனர். 25 – 57 வயது வரையிலான 22 பேரை கைது செய்தனர்.

மாமனார் வீட்டுக்கு தீ வைத்த மருமகன் கைது

வாணியம்பாடி-வாணியம்பாடி அருகே, மாமனார் வீட்டுக்கு தீ வைத்த மருமகனை, போலீசார் கைதுசெய்தனர்.கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ், 60; கட்டடத் தொழிலாளி. இவர் மனைவி நிஷா, 52; ரமேஷ் தினமும் குடித்து விட்டு வந்ததால், 2000ம் ஆண்டு கணவரை நிஷா பிரிந்தார். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே வளையாம்பட்டைச் சேர்ந்த தந்தை ஜெய், 74, வீட்டில் வசித்து வந்தார்.கடந்த மாதம் நிஷாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார், 42, என்பவருக்கும் இரண்டாவது திருமணம் நடந்தது. எம்.ஜி.ஆர்., நகரில் வசித்தனர். இதையறிந்த முதல் கணவர் ரமேஷ், மாமனார் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். நிஷாவுக்கு திருமணம் செய்தது குறித்து கேட்டு தகராறு செய்தார்.அவரை மாமனார் அடித்து விரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், நேற்று அதிகாலை ஜெய் வீட்டை சுற்றி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.இதில் வீட்டிலிருந்த, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. புகார்படி வாணியம்பாடி போலீசார், ரமேஷை கைது செய்தனர்.

மதுரையில் 60 சவரன் நகை கொள்ளை

திருநகர்–மதுரை திருநகரில் பூட்டிய வீட்டில், 60 சவரன் நகை கொள்ளைஅடிக்கப்பட்டது.திருநகர் லயன் சிட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் 55; மனைவி ராமலட்சுமி. திருநகரில் பொன்ராஜ், பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் பொன்ராஜ் கடைக்கு சென்றார். இரவு 11:00 மணிக்கு வீடு திரும்பினர்; வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.பீரோவை உடைத்து, 60 சவரன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மஞ்சு விரட்டில் மாடு மிதித்து வாலிபர் பலி

நாச்சியாபுரம் ; கல்லல் ஒன்றியம் நாச்சியாபுரம் அருகில் மேலமாகாணத்தில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை பிடிக்க முயன்ற மாடு பிடிவீரர் காளை மிதித்ததில் இறந்தார்.முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தி.மு.க.,வினர் நேற்று மேலமாகாணத்தில்வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தினர். அதில் 13 காளைகள் பங்கேற்றன. அணி, அணியாக மாடு பிடிவீரர்கள் காளைகளை பிடித்தனர்.

அதில் திருச்சி, மருங்காபுரி, பழையபாளையத்தைச் சேர்ந்த வரதராஜன் மகன் அழகர்சாமி36, என்பவர் ஒரு காளையை பிடிக்க முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது காளை அவரது நெஞ்சில் மிதித்து சென்றது. அதில் மயங்கி விழுந்த அழகர்சாமிக்கு முதலுதவி அளித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.அனுமதியில்லாமல்நடந்த மஞ்சுவிரட்டு குறித்து நாச்சியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

latest tamil news

குழந்தை மீது மோதிய கதவு; மெட்ரோ நிலையத்தில் தர்ணா

சென்னை:உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில், குழந்தையின் மீது மோதிய தானியங்கி கதவால் சலசலப்பு ஏற்பட்டது.

விமான நிலையம் – விம்கோ நகருக்கு, இரவு இயக்கப்பட்ட மெட்ரோ ரயில், உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில், 9:00 மணிக்கு நின்றதும், பயணியர் ஏறினர்.அப்போது, குழந்தையுடன் ரயிலில் பெண் பயணி ஒருவர் ஏறும்போது, தானியங்கி கதவு மூடப்பட்டதால், பெட்டியின் கதவும், நிலையத்தில் உள்ள ஸ்கிரீன் டோர்’ என்கிற, பாதுகாப்பு கதவும் ஒரே நேரத்தில் குழந்தையின் மீது மோதியது.

சுதாரித்த பெண் அவசரமாக குழந்தையுடன் பெட்டிக்குள் சென்றுவிட்டார்.இது குறித்து, மெட்ரோ உதவி மையத்துக்கு மொபைல் போனில் தொடர்புகொண்டும் பயனில்லை. இதையடுத்து, புது வண்ணாரப்பபேட்டை நிலையத்தில் இறங்கிய பெண் பயணியும், அவருடன் வந்த சக பயணியரும், ரயிலில் ஏறுவதற்குள் அவசரப்பட்டு ஓட்டுனர் பெட்டியின் கதவை மூடியதால், குழந்தைக்கு அடிபட்டு விட்டது என, நிலைய கட்டுப்பாட்டாளரிடம் புகார் கூறினர்.

கவனக்குறைவாக ரயிலை இயக்கிய ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, தர்ணா போராட்டம் நடத்தினார்.நிலைய கட்டுப்பாட்டு அதிகாரியால், புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வந்து, பயணியருடன் சமாதானம் பேசியும், உயர் அதிகாரிகள் வந்து, ரயில் ஓட்டுனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியபடி, நடைமேடையில் அமர்ந்திருந்தனர்.இரவு 1:00 மணி வரை காத்திருந்தும் அதிகாரி யாரும் வராததால், போலீசாரிடம் புகார் அளித்து கலைந்து சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.