தேர்தல் வெற்றியை காலிஸ்தான் இயக்கத்துக்கு சமர்ப்பித்த எம்.பி….! பஞ்சாபில் பரபரப்பு

பஞ்சாபில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய எம்.பி.யாக பதவியேற்கவுள்ள ஒருவர், தனது வெற்றியை காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் தலைவருக்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால் தனது சங்கரூர் தொகுதி எம்.பி. பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இதனால் காலியாக இருந்த அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. முடிவில், சிரோமனி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் (77) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
image
இந்நிலையில், தேர்தலில் வெற்றி அறிவிக்கப்பட்டதும் சிம்ரன்ஜித் சிங் மான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு சங்ரூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறேன். இந்த மகத்தான வெற்றியை அளித்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை காலிஸ்தான் இயக்கத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிரிந்தன்வாவேவுக்கு சமர்ப்பிக்கிறேன். அவரது கொள்கைகளுக்கும், கற்பிதங்களுக்கும் கிடைத்த வெற்றியாகவே இதனை கருதுகிறேன். நான் எம்.பி.யாக பதவியேற்றதும், காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். அதேபோல பிகார், சத்தீஸ்கரில் நக்சல்கள் எனக் கூறி பாதுகாப்புப் படையினரால் பழங்குடியின மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராகவும் குரல் கொடுப்பேன்” என்றார்.
சிம்ரன்ஜித் மான் தீவிர காலிஸ்தான் ஆதரவாளர் என அறியப்படுபவர் ஆவார். இவரது வெற்றி பஞ்சாபுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.