ஜனாதிபதி தேர்தல்… இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவுக்கு டிஆர்எஸ் கட்சி ஆதரவு!!

புதுடெல்லி:  ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரெளபதிமுர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். திரெளபதிமுர்மு ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், இன்று காலை 11 மணி அளவில் யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.  வேட்புமனு தாக்கலுக்கு பிறகு, முடிந்தவரை பல மாநிலத் தலைநகரங்களுக்குச் சென்று பிரச்சாரத்தைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதனிடையே யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவுதர தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், ம், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் தீர்மானித்துள்ளார்.யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியின் போது, டி.ஆர்.எஸ் கட்சியின் கே.டி. ராமராவ் பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது 84 வயதாகும் யஷ்வந்த் சின்ஹா, பீகாரின் பாட்னாவை சேர்ந்தவர். 1960 முதல் 24 ஆண்டுகள் ஐஏஎஸ்.சாக பணியாற்றியவர். பின்னர், 1984ல் ஜனதா கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் இணைந்தார். 1986ல் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1988ல் மாநிலங்களவை எம்பியாகவும் ஆனார். 1990 முதல் 1991 வரை சந்திர சேகர் அரசில் ஒன்றிய நிதி அமைச்சராக இருந்துள்ள யஷ்வந்த் சின்ஹா, 1998ல் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், 2002 முதல் 2004 வரை வெளியுறவு அமைச்சராகவும் பதவி வகித்தார். பாஜ மூத்த தலைவர் அத்வானியின் பெரும் விசுவாசியாக இருந்த யஷ்வந்த் சின்ஹா ஆரம்பம் முதலே கட்சியில் முக்கிய பிரச்னைகளில் எதிர்ப்பு குரல் கொடுக்கும் தலைவராக இருந்துள்ளார்.மோடி பிரதமரான பிறகு 2014ல் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். 2018ல் அக்கட்சியில் இருந்து விலகினார். 2021ல் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். பிரதமர் மோடியையும், அவர் தலைமையிலான பாஜ ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.