புதுடெல்லி: குருகிராமில் புதிய இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அதன் இந்து அமைப்பு வலியுறுத்தி உள்ளது. இதன் மீது பாஜக ஆளும் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லிக்கு அருகிலுள்ளது குருகிராம். ஐடி நகரமான இங்கு தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளது. இதனால், அதில் பணியாற்ற வேற்று மாநிலங்களிலிருந்து பலரும் வந்து வசிக்கின்றனர். இதில் கணிசமாக முஸ்லீம்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு தொழுகைக்கான மசூதிகள் போதுமானதாக இல்லை.
இதன் காரணமாக, அவர்கள் மசூதிக்கு வெளியே சாலைகளிலும், பொதுவெளிகளிலும் தொழுகை நடத்தத் துவங்கினர். இதற்கு குருகிராமில் பாஜக, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்ற போராட்டங்களின் காரணமாக நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டு நடைபெறும் நிலையில், அங்கு வரும் புதிய இறைச்சிக் கடைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கான உரிமங்களை குருகிராமின் மாநகராட்சி அளிக்கிறது. தற்போது அதனிடம் 126 பேர் புதிதாக இறைச்சிக் கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றனர். இவற்றுக்கு எதிராக குருகிராமின் இந்து சங்கர்ஷ் சமிதி எனும் இந்துத்துவா அமைப்பு முதல்வர் மனோகர் லால் கட்டரிடம் மனு அளித்துள்ளது. இது குறித்து இந்து சங்கர்ஷ் சமிதி, முதல்வருக்கான தனது மனுவில் கூறியிருப்பதாவது:
‘குருகிராமின் துரோணாச்சார்யா மற்றும் ஷீத்லா மாதா கோயிலை மதிக்கும் வகையில் தெய்வீக நகரமான குருகிராமில் இறைச்சிக் கடைகளை புதிதாக அனுமதிக்க மாட்டேன் என கடந்த அக்டோபர் 17, 2017இல் நீங்கள் கூறியிருந்தீர்கள். எனவே, புதிய கடைகளுக்கு அளித்த அனைத்து விண்ணப்பங்களையும் ரத்து செய்ய வேண்டும். தற்போதுள்ள இறைச்சிக் கடைகளை குருகிராமிற்கு வெளியே 10 கி.மீ தொலைவிற்கு இடமாற்றம் வேண்டும்.
இவை அனைத்தும் ஒரே இடத்தின் கட்டிடத்தில் அமைக்கப்பட வேண்டும். இத்துடன் சட்டவிரோதமாக குருகிராமில் செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவின் பழ்ம்பெரும் வாய்ந்த ஷீத்லா மாதா கோயில், அருகிலுள்ள ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசவாசிகளாலும் போற்றப்படுகிறது. இதை காரணமாக வைத்து குருகிராமில் இறைச்சிக் கடைகளுக்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.