30 வருடங்களை நிறைவு செய்த 'அண்ணாமலை'
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று 'அண்ணாமலை'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையமைப்பில் ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, மனோரமா, ராதாரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, ரேகா, வைஷ்ணவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம்.
இப்படத்திற்காக முதலில் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் இயக்குனர் வசந்த். ஆனால், திடீரென அவர் மாற்றப்பட்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியது இதுவே முதல் முறை. இந்தப் படத்திற்குப் பிறகும் இக் கூட்டணி இணைந்து 'வீரா, பாட்ஷா' ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தது.
ரஜினிகாந்த் படத்திற்கு தேவா இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டது அப்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் படத்தில் இடம் பெற்ற பாடல்களை சூப்பர் ஹிட்டாகவே கொடுத்தார் தேவா. ''வந்தேன்டா பால்காரன், அண்ணாமலை, கொண்டையில் தாழம்பூ, வெற்றி நிச்சயம், ஒரு பெண் புறா, றெக்கை கட்டி பறக்குதடி,” என அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. அதற்குப் பிறகு தான் தேவா தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.
ஏழை பால்காரரான ரஜினிகாந்த்தும், பணக்கார ஹோட்டல் முதலாளியான சரத்பாபும் சிறு வயது முதலே நண்பர்கள். ரஜினிகாந்திற்குச் சொந்தமான வீட்டை ஏமாற்றி அந்த இடத்தில் ஹோட்டல் ஒன்றைக் கட்டுகிறார் சரத்பாபுவின் அப்பா ராதாரவி. மேலும், ரஜினியும், சரத்தும் பிரிவதற்கான வேலைகளையும் செய்கிறார். நண்பனால் ஏமாற்றப்பட்ட ரஜினி, பின்னர் தனது முயற்சியில் பெரிய ஹோட்டல் முதலாளியாகிறார். அதற்குப் பிறகு அவர்களது குடும்ப வாரிசுகளாலும் மோதல் தொடர்கிறது. அதன் முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ரஜினிக்குப் பொருத்தமான ஹீரோயிசக் கதை, அம்மா சென்டிமென்ட், நட்பு, காதல், நகைச்சுவை என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக இந்தப் படம் வெளிவந்து ரஜினி ரசிகர்களை முழுவதும் திருப்திப்படுத்தியது.
இந்தப் படத்தில்தான் ரஜினிகாந்த் பெயர் வரும் போது 'சூப்பர் ஸ்டார்' என்ற கிராபிக்ஸ் கார்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்று வரையும் தொடர்கிறது.
25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்ட படம். 'பாட்ஷா' படம் வரும் வரை 'அண்ணாமலை' படம்தான் தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படமாக இருந்தது.
'பாட்ஷா' படத்திற்குப் பிறகு இன்றும் ரஜினி ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் படமாக 'அண்ணாமலை' படம் இருக்கிறது.