அதிமுகவை ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஒ.பி.எஸ் என சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். மேலும், `பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கு முன் ஒ.பி.எஸ் பதவியை விட்டு கொடுத்து செல்ல வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “அதிமுகவுக்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக அறிவிக்க உள்ளோம். ஒ.பன்னீர்செல்வம் மீது நாங்கள் அன்பு கொண்டவர்கள். ஓ.பி.எஸ் தவறான முடிவு எடுக்கும்போது சுட்டிக்காட்ட கடமைப்பட்டு உள்ளோம்.
சட்டமன்ற தேர்தலில் ஒ.பி.எஸ் தனது தொகுதியை தவிர எந்த தொகுதிக்கும் பிரச்சாரம் செய்ய வரவில்லை. ஒ.பி.எஸின் நெருங்கியவர்களுக்கு கூட பிரச்சாரம் செய்யவில்லை. ஒ.பி.எஸ் சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறார். தென் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. ஆனால் ஒ.பி.எஸ் தென் மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக ஒரு மாயை உருவாக்கி உள்ளார். உண்மையில் ஒ.பி.எஸ்-க்கு அதிமுகவில் எந்தவொரு செல்வாக்குமில்லை.
தொடர்புடைய செய்தி: ’’துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ்’’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
திமுக ஆட்சியை வாழ்த்துபவர்கள் துதி பாடுபவர்கள், அதிமுகவிற்கு தலைமை ஏற்க கூடாது. தனது சுயநலம் கருதி நேற்று ஒபிஎஸ் பயணத்தை மேற்கொண்டார். 3 முறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஒ.பி.எஸ்-க்கு பொதுக் குழுவில் அவ மரியாதை ஏற்பட்டதாக சொல்கிறார்… ஆனால் அதனை ஒ.பி.எஸ்-ஏ தவிர்த்து இருக்கலாம். அதிமுகவில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் மிக சிறந்த தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார். தற்போதைய நிலைமையை புரிந்து கொண்டு ஒ.பி.எஸ் அதிமுகவில் இருந்து விலகி செல்ல வேண்டும். பன்னீர்செல்வமாக இருந்த ஒ.பி.எஸ் தற்போது அனுதாபத்தை தேடி கண்ணீர் செல்வமாக மாறி உள்ளார். ஒபிஎஸ்-யை பல காலம் ஒதுக்கி வைத்தவர் ஜெயலலிதா. ஒபிஎஸ் க்கு எதிராக எந்த சதி வளையும் பின்னப்படவில்லை, அவரை எங்கும் அவமதிக்கவில்லை சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு ஒ.பி.எஸ்ம் ஒரு காரணமே.
தோல்வி ஏற்படும் என நினைத்து இருந்தால் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஒ.பி.எஸ் தடுத்து நிறுத்தி இருக்கலாமே? பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் பதவிகளை யாரும் அங்கரீக்க தேவையில்லை. அதிமுகவில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. நாங்கள் யாருடனும் பேச்சுவார்த்தை செய்ய தயாராக இல்லை. பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கு முன், ஒ.பி.எஸ் பதவியை விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.
தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஒ.பி.எஸ் அனுமதி தேவையில்லை. அதிமுகவை நிர்வாகம் செய்ய ஒ.பி.எஸ் க்கு தகுதி, திறமை இல்லை, ஒபிஎஸ் மட்டும் தென் மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட சமுதாயதிற்கும் தலைவர் இல்லை, அவரை போல் பல தலைவர்கள் உருவாக தயாராக உள்ளனர் ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தனது தொகுதி மேம்பாடு குறித்து முதல்வரை சந்தித்து அவலம், சட்டமன்றத்தில் பேசலாம் மனு கொடுத்தது ஏற்புடையது அல்ல,
அதிமுக அரசிற்கு எதிராக வாக்களித்தவர்கள் அவர்களிடம் இனி எதற்கு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவின் பொதுச்செயலாளர், அதிமுகவை ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஒபிஎஸ்” என கூறினார்.
– செய்தியாளர்: கணேஷ்குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM