புதுடெல்லி: அவசரநிலை காலத்தில் ஜனநாயகத்தை முடக்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது. அந்த அவசரநிலையின் இருண்ட காலத்தை நாம்மறந்துவிடக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்குபிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி,இந்த மாதத்துக்கான (90-வது) ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது. கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது தனிநபர் சுதந்திரம் உள்ளிட்ட நாட்டு மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. ஜனநாயகத்தை ஒடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், ஜனநாயகத்தின் மீது இந்தியர்கள் வைத்திருந்த நம்பிக்கையை தகர்க்க முடியவில்லை. நாட்டு மக்கள் ஜனநாயக முறையில் போராடி, அவசரநிலையை தோற்கடித்து ஜனநாயகத்தை மீட்டனர். இதுபோல ஆட்சியாளர்களின் சர்வாதிகார போக்கை ஜனநாயக முறையில் தோற்கடித்த சம்பவம் உலகில் எங்கும் நடந்ததாக தெரியவில்லை.
அவசரநிலை காலத்தில் நடந்த நிகழ்வை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை எதிர்த்துநடந்த போராட்டத்திலும் பங்கேற்றிருக்கிறேன். இப்போது நாடு 75-வதுஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடி வரும் வேளையில், அவசரநிலையின் இருண்ட காலத்தை நாம் மறக்கக் கூடாது. வருங்கால சந்ததியினரும் இதை மறக்கக் கூடாது.
ஸ்டார்ட்-அப்கள்: 2019-ம் ஆண்டுக்கு முன்பு விண்வெளி துறையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஈடுபடவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. இப்போது நம் நாட்டு இளைஞர்கள், இத்துறையில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர். உதாரணமாக, சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அக்னிகுல், ஸ்கைரூட் ஆகிய 2 ஸ்டார்ட்-அப்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தநிறுவனங்கள் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்வதற்கான ராக்கெட்செலுத்து வாகனங்களை உருவாக்கி வருகின்றன. இதன்மூலம் செயற்கைக்கோள்களை செலுத்தும் செலவு கணிசமாக குறையும்.
கழிவு மறுசுழற்சி: புதுச்சேரி கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடல், கடற்கரை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்கவலியுறுத்தி புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். காரைக்காலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கிலோ கழிவுப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு அதிலிருந்து உரம் தயாரிப்பதற்கான பொருட்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன. மற்றவை மறுசுழற்சி செய்யப்படுகிறது.
ஜூலை 1 முதல் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை தொடங்க உள்ளது. இதைக் காண புரி செல்வதற்கு ஒடிசா மக்கள் தயாராகி வருகின்றனர். இதுபோல மகாராஷ்டிராவில் பந்தர்பூர் யாத்திரை, காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகளை நாம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை 200 கோடியைநெருங்கி உள்ளது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம். 2 டோஸ் செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும்நடக்கிறது. இதற்கு தகுதி பெற்றவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மழைக்காலம் தொடங்கி உள்ளதால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, நாம் எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.