ஓ.பன்னீர்செல்வம் ஆரம்ப காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்துள்ளார் என்றும் ஓட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் என்றால் ஓ.பன்னீர்செல்வம்தான் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான மோதல் சூறாவளியாக வீசி வரும் நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூறுகையில், நிர்வாகிகளின் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். 4 நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர இயலாது என கடிதம் கொடுத்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், “ஆரம்ப காலத்தில் இருந்தே அதிமுகவுக்கு பல துரோகங்களை ஓ.பன்னீர்செல்வம் செய்துள்ளார். ஓட்டுமொத்த துரோகத்தின் அடையாளம் என்றால் ஓ.பன்னீர்செல்வம்தான்.
துரோகம் அவரது உடன் பிறந்த ஓன்று. தூங்குவதுபோல் பன்னீர்செல்வம் நடிக்கிறார். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்ட மாட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மாறிவிட்டார்.” என்று கூறினார்.
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து பேசிய ஜெயக்குமார், “அதிமுகவின் ஒற்றைத் தலைமை ஆக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.
முன்னதாக, அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஓபிஎஸ் புகைப்படத்தை கிழித்து எறிந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜெயக்குமார், “பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பேனரை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“