வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக போலி ஆவணங்களை தயாரித்து வழக்கு தொடர்ந்த ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான தீஸ்தா செதல்வாட் நேற்று (ஜூன் 26) கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக பல்வேறு வகைகளில் வளர்ந்து வந்த தீஸ்தா செதல்வாட் இப்போது வீழ்ந்து கிடக்கிறார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்த தீஸ்தாவின் தாத்தா எம்.சி செதல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரல். தீஸ்தா ஊடகவியலாளராக தன் பணியை துவக்கினாலும், பெண்கள், தலித்கள், முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராடியுள்ளார். தீவிர பெண்ணியவாதியான தீஸ்தா, 2007ல் மஹாராஷ்டிராவில் பொதுச்சேவை செய்ததற்காக மத்திய அரசின் ‛பத்ம ஸ்ரீ’ விருதை பெற்றுள்ளார். 2006ல் நானி ஏ.பால்கிவாலா விருது, 2009ல் இந்திய முஸ்லிம்கள் சங்கங்களின் கூட்டமைப்பு விருதையும் பெற்றுள்ளார். உலக செயற்பாடுகளுக்கான பார்லிமென்ட் உறுப்பினர்கள் ‛ஜனநாயக காவலர்’ விருதினை நியூசிலாந்து பிரதமர் ஹெலன் கிளார்க்குடன் சேர்ந்து பெற்றுள்ளார்.
வீழ்ச்சி
இப்படி அறியப்பட்ட சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட், 2002ல் நடந்த குஜராத் கலவர வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை முடிவை எதிர்த்து பிரதமர் மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது இவரின் வீழ்ச்சிக்கு அடித்தளமானது. குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., இஷான் ஜாப்ரி கொல்லப்பட்டார். இதில், அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு, குற்றம் சாட்டப்பட்ட நரேந்திர மோடி உள்பட 64 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றது. இதனை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி, ஆமதாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் தன்னையும் இணைத்துக்கொண்டார். இந்த மனு தள்ளுபடியானதால் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஜாகியா மனு தாக்கல் செய்தார். அங்கும் மனு தள்ளுபடியானது. இதனையடுத்து 2018ல் ஜாகியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் தீஸ்தா செதல்வாட்டும் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கும் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், ‛சிலருக்கு எதிராக செயல்படுவதற்காக, இந்த வழக்கை தீஸ்தா செதல்வாட் பயன்படுத்தியுள்ளார். அவர் ஜாகியா ஜாப்ரியின் உணர்வோடு விளையாடியுள்ளார். இந்த பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும்’ என உச்சநீதிமன்றம் கூறியது. இந்நிலையில் நேற்று போலி ஆவணங்களை தயாரித்து அளித்த குற்றச்சாட்டின் பேரில், தீஸ்தாவை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் மும்பையில் கைது செய்தனர். இவரது வெளிநாட்டு தொடர்பு, அவரது வங்கிக் கணக்குகள், அவரோடு தொடர்புடையவர்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்யும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Advertisement