’’துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ்’’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஓபிஎஸ் துரோகத்தின் அடையாளம் எனவும், கட்சியின் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா? இல்லையா? என்பது பொதுக்குழு கூட்டத்தில் தான் தெரியும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் தலைமையில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவங்கிய கூட்டம் 11.30 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி உள்ளதால் கட்சியின் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்வது குறித்தான கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் தலைமை தாங்கினார்.
image
கூட்டத்தில் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. தற்போது இந்த பொதுக்குழு கூட்டத்திற்கான கடிதங்களை அனுப்ப முடிவு செய்யபட்டு உள்ளது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதனை எப்போது வெளியிடுவது என்பது குறித்து தலைமை கழகம் முடிவெடுக்கும்.
image
75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 நபர்கள் வந்திருந்தனர். 5 நபர்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியாதது குறித்து கடிதம் அனுப்பி உள்ளனர். பெரும்பாலன நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்’’ எனத் தெரிவித்தார். தொடர்ந்து முரசொலி கருத்து குறித்து பதில் அளித்த அவர், அவர்கள் கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது. தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு பல்வேறு சமயங்களில் துரோகம் இழைத்த கட்சி திமுக. இது மக்களுக்கும் தெரியும்’’ என்றார்.
image
தொடர்ந்து பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம் என்றும், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவருடைய செயல்பாடுகள் அப்படிதான் உள்ளது என்றும் அவர் கட்சியின் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா? இல்லையா? என்பது பொதுக்குழு கூட்டத்தில்தான் தெரியவரும் எனவும் தெரிவித்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்டாயபடுத்தி அழைக்கவில்லை; அப்படி ஒரு நிலையிலும் நாங்கள் இல்லை; எங்களுடன் உள்ளவர்கள் உண்மையான தொண்டர்கள் என்று பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.