`கணவரின் இழப்பு; 50 வயதில் சினிமா வாய்ப்புக்கான ஓட்டம்…' – நடிகை கீதா கைலாசம் ஷேரிங்ஸ்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரை நன்கு அறிந்தவர்களுக்கும், அவர் காலத்து சினிமா பிரபலங்களுக்கும், கீதா கைசாலத்தை நிச்சயம் தெரிந்திருக்கும். பாலசந்தரின் மருமகள், சின்னத்திரை நடிகர்கள் பலரையும் அறிமுகப்படுத்திய பால கைலாசத்தின் மனைவி, கதை சொல்லி, கணக்காளர் என கீதாவை பற்றி இந்தத் தலைமுறைக்குத் தெரியப்படுத்தப் பல அடையாளங்கள் உண்டு. அந்தப் பட்டியலில் குணச்சித்திர நடிகையாகவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

கீதா கைலாசம்

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மிடுக்கான ரங்கன் வாத்தியாரின் (பசுபதி) மனைவியாகச் சில காட்சிகளில் மட்டுமே கீதா வந்து போனாலும், அந்தக் கதாபாத்திரத்தில் ஒன்றிப்போனார். ‘வீட்ல விசேஷம்’ படத்தில் செவிலியராகத் தலைகாட்டியவர், உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ படத்தில் ஸ்கோர் செய்யத் தயாராகி வருகிறார். 50 வயதை நெருங்கவிருப்பவர், புதுமுக கலைஞரைப்போல அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகளுக்காக இயங்குவது, ஆச்சர்ய மாற்றம். அதற்கான காரணத்துடனேயே உரையாடலை ஆரம்பித்தார் கீதா.

“எங்கப்பா, கதைகள், சிறுகதைகள் பலவற்றையும் எழுதிய எழுத்தாளர். அவரின் பால்ய நண்பர்தான் என் மாமனார். சினிமா மேலயும் ரொம்பவே ஆர்வம் கொண்டிருந்த எங்கப்பா, நான் சினிமாவுல நடிக்கணும்னு ஊக்கப்படுத்திகிட்டே இருப்பார். நடிகையாகணும்னு எனக்கும் ஆசை இருந்துச்சு. ஏன், எதுக்குனு ஆழமா சிந்திக்காமலேயே வாழ்க்கையில சில விஷயங்களை நாம பண்ணிடுவோம்ல. அதுபோலத்தான், சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்ட் கோர்ஸ் படிச்சேன்.

கீதா கைலாசம்

கல்யாணத்துக்கு அப்புறமா, கணவரின் ‘மின்பிம்பங்கள்’ நிறுவனத்தோட கணக்கு வழக்குகளைப் பார்த்துகிட்டது மட்டுமன்றி, தயாரிப்பு மற்றும் கதை சார்ந்த விஷயங்கள்லயும் கவனம் செலுத்தினேன். நடிக்கக் கூச்சப்படுற பெண் கலைஞர்கள் பலரையும் ஊக்கப்படுத்தினேன்; நடிப்பு சொல்லிக் கொடுத்தேன்.

அந்த ஓட்டத்துல சினிமாவுல நடிக்கும் என் கனவை மறந்துட்டேன். அது, என் குடும்பத்துல பலருக்கும் தெரியும். இருந்தாலும் எனக்கான குரலை நான்தானே எழுப்பணும்? நடிக்கணும்ங்கிற என் விருப்பத்தை குடும்பத்துல அழுத்தமா சொல்லியிருந்தா, நிச்சயமா எங்க தயாரிப்பு புராஜெக்ட்டுகள்லயேகூட சிரமமில்லாம நடிச்சிருக்கலாம். ஆனா, ஏனோ ஒரு தயக்கத்துல நானும் கடந்து போயிட்டேன்.

2004-ல் என் கணவர் தவறிட்டார். அவர் உடலை வீட்டுல கிடத்தி வெச்சிருந்தோம். அப்போ என் பொண்ணு சொன்ன ஒரு விஷயம் என்னை ரொம்பவே பாதிச்சது. ‘என்னைவிட என் பையன் பெரிய ஜீனியஸ்’னு என் மாமனாரே பலமுறை சொல்லியிருக்கார். ஆனா, ‘டாக்குமென்ட்ரி ஃபிலிம்மேக்கரா பாலாவுக்குள் இருந்த திறமைகள் பெரிசா வெளியுலகத்துக்குத் தெரியாமலேயே போயிடுச்சு. அதை மேற்கொள்காட்டி, ‘அப்பாதான் தன் கனவுகளை முழுசா வெளிப்படுத்தாமலேயே போயிட்டார். அவரை மாதிரியே நீயும் இருந்திட போறியா? உன் கனவுக்கு நீதான் போராடணும்…’னு அவ கேட்ட கேள்விகள், தூக்கத்தில் இருந்து தட்டியெழுப்பினது போல என்னைத் திடுக்கிட வெச்சது.

அதுக்கப்புறமாதான் இனி என் மனசுக்குப் பிடிச்ச விஷயங்களைச் செஞ்சே தீரணும்னு முடிவெடுத்தேன்” என்பவர், அதன்பிறகு, தான் எழுதிய ‘சாந்தா டீச்சர்’ சிறுகதையை மேடை நாடகமாக அரங்கேற்றினார்.

கீதா கைலாசம்

‘மின் பிம்பங்கள்’ தயாரிப்பு நிறுவனத்தால் உருவான ‘ரமணி Vs ரமணி’, ‘மர்மதேசம்’, ‘வீட்டுக்கு வீடு லூட்டி’ உள்ளிட்ட ஹிட் சீரியல்கள் பலவற்றிலும் கீதாவின் உழைப்பு இருந்திருக்கிறது. ஆஃப் ஸ்கிரீனில் நீண்டகால அனுபவம் பெற்றிருந்தாலும், தனக்கிருக்கும் நடிப்பு ஆர்வத்தைத் தாமதமாக வெளிப்படுத்தியவருக்கு, திரைக்கு வரவிருக்கும் ‘கட்டில்’ படத்தின் மூலம் முதல் சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘நவரசா’ (ரெளத்திரம்) வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார்.

பெயர் வாங்கிக் கொடுத்த ‘சார்பட்டா பரம்பரை’யில் கமிட்டான விதத்தை ஆர்வமாகச் சொன்னவர், “இயக்குநர் பா.இரஞ்சித் சாரை ஒருமுறை சந்திச்சப்போ, அவர் படத்துல நடிக்கும் என் ஆசையை ரசிகையா வெளிப்படுத்தினேன். பிறகு, ‘சார்பட்டா பரம்பரை’ படத்துக்கான ஆடிஷன்ல தேர்வானேன். வொர்க் ஷாப் அனுபவத்துடன் அந்தப் படத்துல எல்லோரும் வேலை செஞ்சோம். என் நடிப்பு ஆர்வத்துக்கு நல்ல தீனி கிடைச்ச மாதிரி, அவர் படத்துல வேலை செஞ்ச அனுபவம் வியப்பையும் நிறைவையும் கொடுத்துச்சு. அந்தப் படத்தையும், ‘நவரசா’ வெப் சீரிஸையும் ஓ.டி.டி-யில பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா, என் நடிப்பை தியேட்டர்ல பார்க்கணும்ங்கிற ஆசை, கொரோனாவால தள்ளிப்போய்கிட்டே இருந்துச்சு.

‘வீட்ல விசேஷம்’ படத்தில்…

‘வீட்ல விசேஷம்’ படம் மூலமா அந்த எதிர்பார்ப்பும் இப்போ நிறைவேறிடுச்சு. ‘பதாயி ஹோ’ இந்திப் படத்தைப் பார்த்ததும், அந்த அம்மா கேரக்டர்ல நாம நடிச்சா நல்லாயிருக்குமேன்னு ரொம்பவே ஆசைப்பட்டேன்.

அந்தப் படத்தை தமிழ்ல ஆர்.ஜே.பாலாஜி ரீமேக் செய்யுறதைக் கேள்விப்பட்டு, ‘உங்க புதுப்படத்துல நடிக்க ஆசைப்படுறேன்’னு அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். அதைப் பார்த்துட்டு அவர் கூப்பிட்டாரான்னு தெரியலை. ஆனா, நான் நடிச்ச அந்தப் பிரசவ ரூம் போர்ஷனை ஷூட் பண்றதுக்கு ரெண்டு நாள்களுக்கு முன்னாடிதான் என்கிட்ட விஷயத்தைச் சொன்னாங்க.

நர்ஸா சில காட்சிகள்ல மட்டுமே வந்துபோகிற ரோல்னு தெரிஞ்சும்கூட, ஷூட்டிங் நடந்த கோயம்புத்தூருக்கு ஆர்வமா போனேன். நர்ஸுக்கான காஸ்டியூம் பயன்படுத்த ரொம்பவே தயக்கமா இருந்துச்சு. அதை வெளிக்காட்டிக்காம, கொஞ்சம் கூச்சத்துடன்தான் நடிச்சேன். எனக்கு ஏற்கெனவே பரிச்சயமான ஊர்வசி மேடமும், சத்யராஜ் சாரும் சப்போர்ட்டிவ்வா இருந்தாங்க.

இந்தப் படம்தான், என் நடிப்புல தியேட்டர்ல வெளியான என் முதல் புராஜெக்ட். இப்போ சேலத்துல ‘மாமன்னன்’ ஷூட்டிங்ல இருக்கேன். இந்தப் படக்குழுவினர் சிலரோட அந்தப் படத்தை தியேட்டர்ல பார்த்தப்போ எனக்குள்ள அப்படியொரு சந்தோஷம்” ஆன் ஸ்கிரீனில் தன்னைப் பார்த்த அனுபவங்களை விவரிக்கும் கீதாவின் குரலில் எதிரொலிக்கிறது மழலையின் மகிழ்ச்சி.

‘வீட்ல விசேஷம்’ படத்தில்…

“ஆடிஷன்ல சாதாரண நபராகவே என்னை அடையாளப்படுத்திப்பேன். என்னை பத்தி தெரிஞ்சுகிட்டு யாராச்சும் கேட்டாதான் என் பின்னணியைச் சொல்வேன். ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்கான ஆடிஷன்ல கலந்துகிட்டது சுவாரஸ்யமான அனுபவம்.

இயக்குநர் கெளதம் மேனன் சார், ‘இது ரொம்ப சின்ன ரோல்தான். உங்களுக்கு ஓகேவா?’னு கேட்டார். ‘அதனால என்ன சார், நிச்சயம் நடிக்கிறேன்’னு சொல்லித்தான் அந்தப் படத்துலயும் கேமியோ ரோல்ல நடிச்சேன்.

சினிமாத்துறையில பலரும் எனக்குப் பழக்கமானவங்கதான். அந்த நட்பின் அடிப்படையில வாய்ப்பு கேட்கிறதைவிட, என் முந்தைய படங்கள் மூலமா எனக்கு வாய்ப்பு வரணும்னுதான் ஆசைப்படுறேன்.

அப்படித்தான், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துல பா.இரஞ்சித் சார் என்னை நம்பி மறுபடியும் வாய்ப்பு கொடுத்தார். நான் நடிச்சுகிட்டிருக்கிற ‘மாமன்னன்’, நடிச்சு முடிச்சிருக்கிற ‘யமகாதகி’ போன்ற படங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

தயக்கத்தாலயும் உரிய காலத்துல சரியான முடிவெடுக்கத் தவறினதாலயும் நிறைய விஷயங்களை இழந்துட்டேன். அதனால, இனி தொடர்ந்து நடிக்கணும்; அதை திறமையின் அடிப்படையில மட்டுமே சாத்தியப்படுத்தணும்னு உறுதியா இருக்கேன்” என்று உறுதிபடக் கூறுகிறார்.

கீதா கைலாசம்

தன் கணவரின் வெற்றிடத்தால் வருந்தும் கீதா, கே.பாலசந்தர் தொடர்புடைய தன் குடும்பத்தினர் அனைவருடனும் உறவுமுறையைத் தாண்டிய நல்ல நட்பிலும் இருக்கிறார்.

“தாமதமா நடிக்க வந்திருக்கிறதால, ‘இது சரிவருமா? ஆக்ட்டிவ்வா நம்மால நடிக்க முடியுமா?’ன்னு ஆரம்பத்துல எனக்குள் சந்தேகம் இருந்துச்சு. கடந்து போன விஷயங்களை நினைச்சு வருத்தப்படுறதைவிட, வாழுற காலத்தை எவ்ளோ சரியா பயன்படுத்திக்கிறோம்ங்கிறதுலதான் மகிழ்ச்சி இருக்குங்கிறதையும் தீர்க்கமா உணர்ந்திருக்கேன். அதனால, உடலளவுலயும் மனசளவுலயும் நடிப்புக்காக என்னைத் தயார்படுத்திகிட்டிருக்கேன். அதுக்கு என் பொண்ணும் பையனும் ஊக்கப்படுத்துறாங்க. அதனால, சின்னது, பெரிசுங்கிறதைத் தாண்டி நல்ல வாய்ப்புகள் எதுவானாலும் நடிப்பேன்” என்று, கலகலப்புடன் முடிக்கிறார் கீதா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.