வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சிவசேனா தலைமையிலான கூட்டணி மஹாராஷ்டிர அரசுக்கு அளித்த ஆதரவினை 38 அதிருப்தி எம்எல்ஏ.,க்களும் வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மஹா., அரசு பெரும்பான்மையை இழந்தது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், ‛மஹா விகாஸ் அகாதி’ என்னும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சிவசேனா மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளார். அவருடன், 38 சிவசேனா எம்.எல்.ஏ.,க்களும், ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் அசாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவசேனா சார்பில் சட்டசபை துணை சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 16 சிவசேனா எம்எல்ஏக்களுக்கு மஹாராஷ்டிரா சட்டசபை துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். இன்று (ஜூன் 27) மாலை 5 மணிக்குள் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. தகுதி நீக்க நோட்டீசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் 38 அதிருப்தி சிவசேனா எம்எல்ஏ.,க்கள் மஹாராஷ்டிர அரசுக்கு தாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஏக்நாத் ஷிண்டே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மஹா விகாஸ் அகாதி கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் சிவசேனா தலைமையிலான மஹாராஷ்டிர அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது.
Advertisement