தமிழகத்தில் 24 மணி நேரத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில், 50 சதவிகித தொற்று பாதிப்பு சென்னையில் மட்டும் ஏற்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயின் தாக்கமும் பரவலும் குறைந்திருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் சென்னையில் ஏற்படும் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று பாதித்த இடங்கள் குறித்தும் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிக்கையில், “தமிழகத்தில் 24 மணிநேரத்தில் ஏற்படும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில், 50 சதவிகித தொற்று பாதிப்பு சென்னையில் மட்டும் ஏற்படுகிறது.
சென்னையில் மட்டும் நேற்று சுமார் 497 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தொற்றுநோயின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தொண்டைவலி, தலைவலி போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதித்த 8 சதவிகித பேர், மருத்துவமனை சிகிச்சையில் உள்ள நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள இயலாத மக்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பிள்ளைகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் குழந்தைளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், அவற்றை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவமனையை அணுகி, மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.
மக்களும் பெற்றோரும் தொற்றுநோய் பரவலைத் தவிர்க்க, தங்கள் முழு ஒத்துழைப்பைத் தர வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.