தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தின்மீதான மோகம் காரணமாகப் பணத்தை இழக்கும் இளைஞர்கள், மன விரக்தியில் விபரீத முடிவெடுக்கின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கும் நிலையில், இது தொடர்பாகக் கடந்த ஜூன் 6-ம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்படும் பாதிப்புகள், ஆபத்துகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் ஐ.ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர், உளவியல் மருத்துவர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே மற்றும் ஐ.பி.எஸ் அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குழு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் எனவும் கூறப்பட்டது. குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கை சமர்ப்பிப்பு:
இந்தக் குழுவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்துகொடுத்தது. குழுவானது, ஆன்லைன் விளையாட்டுகள் திறன்களை வளர்கின்றனவா… இதன்மூலம் ஏற்படும் தீமைகள், நிதியிழப்பு என்னென்ன என்பது குறித்து ஆய்வு செய்தது. ஆன்லைன் விளையாட்டுகளில் பண பணப்பரிவர்த்தனை எந்தளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டது.
ஆன்லைன் விளையாட்டுக்குத் தடைச் சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் இந்தக் குழு ஆய்வு நடத்தியது. நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர் தங்கள் ஆய்வை அண்மையில் நிறைவு செய்தனர். இந்த நிலையில், ஆய்வு முடிவுகள் குறித்த அறிக்கையைத் தமிழ்நாடு முதல்வரிடம் குழு உறுப்பினர்கள் இன்று சமர்ப்பித்தனர். இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.