திருமலை திருப்பதி மலைப்பாதையில் ஏழுமலையான் பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருமலை திருப்பதி ஏழுமலையானை அன்றாடம் தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு ஆந்திர மாநில அரசின் பஸ் போக்குவரத்து வசதி உள்ளது. இத்துடன் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் கார், வேன் மற்றும் தனியார் பஸ்களிலும் தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதை 22 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. இந்த மலைப்பாதையை சுற்றி அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால், வனத்துக்குள் இருந்து கரடி. சிறுத்தை, யானை, பாம்பு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வபோது சாலைக்கு வருவதும், அவற்றை கண்டு வாகன ஓட்டிகளும். பக்தர்களும் அலறி அடித்து ஓடும் சம்பவங்கள் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை திருமலை திருப்பதி மலைப்பாதையின் 7 ஆவது கிலோமீட்டர் தொலைவில் 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம், 2 குட்டிகளும் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து மலைப்பாதைக்கு வந்துள்ளன.

அங்கு ஆஞ்சநேயர் கோயில் அருகே ஒன்றுகூடிய யானைகள் கூட்டம், பிளிறயபடி ஆக்ரோஷத்துடன் மரக்கிளைகளை தும்பிக்கையால் ஒடித்து வீசி எறிந்தபடி இருந்துள்ளன. அதனை தொடர்ந்து சாலையை வழிமறிந்து அவை கும்பலாக நின்றுக் கொண்டிருந்தன.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் யானைகளை வேட்டு வைத்து வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். யானைகளின் ரோட் ஷோ காரணமாக திருமலை திருப்பதி மலைப்பாதையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.