அகமதாபாத்: கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டின்பேரில் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் மும்பையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் அவரை கைது செய்து, அகமதாபாத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு குற்றத் தடுப்பு போலீஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அகமதாபாத் பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு தீஸ்தா நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய வழக்கில் தீஸ்தா சீதல்வாட் மட்டுமன்றி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சஞ்சீவ் பட் சிறையில் உள்ளார். குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
சீதல்வாட், ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குஜராத் போலீஸ் தரப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் டிஐஜி தீபன் பத்ரன், டிசிபி சைதன்யா மாண்லிக், எஸ்.பி. சுனில் ஜோஷி, ஏஎஸ்பி சோலன்கி உள்ளிட்ட அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
தீஸ்தாவின் வெளிநாட்டு தொடர்பு, அவரது வங்கிக் கணக்குகள், அவரோடு தொடர்புடையவர்கள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்யும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.