இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே, எதிர் வரும் குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க கூட்டணி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் சார்பில் சரத் பவார், ஃபரூக் அப்துல்லா, கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் பொது வேட்பாளர் தேர்வில் முன்மொழியப்பட்டதாகவும், மூவருமே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் களமிறக்கின. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல்செய்ய சரத் பவார், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களுடன் யஷ்வந்த் சின்ஹா சென்றிருந்தார். வேட்புமனுத் தாக்கல்செய்த பின்பு டெல்லியின் இந்திய அரசியலமைப்பு கிளப்பில் (Constitution Club of India) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய யஷ்வந்த் சின்ஹா, “எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி என்னைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்காக நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லோரும் நான் எதிர்க்கட்சிகளின் 4-வது தேர்வு… எனக்கு முன்னால் 3 பேர் முன்மொழியப்பட்டதாகக் கூறுகிறார்கள். உண்மையில், நான் 10-வதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஏனென்றால் இந்த போரின் தன்மை அத்தகையது” எனத் தெரிவித்தார்.