தொழில்நுட்ப பயன்பாட்டில் குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: அமித் ஷா

கெவாடியா: தொழில்நுட்ப பயன்பாட்டில் குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார். குஜராத் மாநிலம் கெவாடியாவில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். தடய அறிவியல் திறனை வலுப்படுத்துதல் மற்றும் அறிவியல்பூர்வ புலனாய்வு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை கையாளும் இத்தருணத்தில் அவர்களுக்கு ஒருபடி மேலாக புலனாய்வு அமைப்புகள் செயல்பட வேண்டும். குற்றங்களை கண்டறிய தொழில்நுட்பம் மற்றும் ஆதாரம் அடிப்படையிலான புலனாய்வில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. ஆறு ஆண்டுகளுக்கும் கூடுதலான சிறைத்தண்டனையுடன் கூடிய அனைத்து குற்ற வழக்குகளிலும் தடயவியல் விசாரணையை கட்டாயமாக்கும் நோக்கில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. தடய அறிவியல் துறையில் பயிற்சி அளிப்பதற்காக தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கல்லூரியை தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்குமாறு ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.