பர்மிங்காம்,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது.
டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக டெஸ்ட் அணியில் காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இணையவுள்ளார்.
ரோகித் சர்மா கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மயங்க் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மயங்க் அகர்வால் இன்று இங்கிலாந்துக்கு புறப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளதால் மயங்க அகர்வால் நேரடியாக அணி வீரர்களுடன் இணைவார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் வருமாறு:-
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சேதேஷ்வர் புஜாரா, ரிஷப் பண்ட், கே.எஸ். பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா, மயங்க் அகர்வால்