“கண்ணீர் செல்வமாகிவிட்டார் பன்னீர்செல்வம்” – வி.வி.ராஜன் செல்லப்பா

மதுரை: ”தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து விலகிச் செல்ல வேண்டும்” என்று மதுரையின் முன்னாள் மேயரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”அதிமுகவுக்கு வலிமையான தலைமை வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். ஜூலை 11 ஆம் தேதி கே.பழனிச்சாமி பொது செயலாளராக அறிவிக்க உள்ளோம். ஓபிஎஸ் மீது நாங்கள் அன்பு கொண்டவர்கள், ஓபிஎஸ் தவறான முடிவு எடுக்கும்போது சுட்டிக் காட்ட கடமைப்பட்டு உள்ளோம்.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ய வரவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கு கூட ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யவில்லை. ஓபிஎஸ் சுயநலத்துடன் செயல்பட்டு வருகிறார். ஓபிஎஸ்ஸுக்கு அதிமுகவில் எந்தவொரு செல்வாக்குமில்லை.

தென் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக ஒரு மாயை உருவாக்கப்பார்க்கிறார். திமுக ஆட்சியை வாழ்த்துபவர்கள், துதி பாடுபவர்கள் அதிமுகவிற்கு தலைமை ஏற்கக் கூடாது.

ஓபிஎஸ் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனது தொகுதியை விட்டு எந்த தொகுதிக்கும் வாக்கு சேகரிக்கவில்லை. தனது சுயநலம் கருதி ஓபிஎஸ் தற்போது தென் மாவட்டங்களில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். 3 முறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

ஓபிஎஸ்ஸுக்கு பொதுக் குழுவில் அவமரியாதை ஏற்பட்டதாக சொல்கிறார். அவர் அங்கு வருவதை ஓபிஎஸ் தவிர்த்து இருக்கலாம். அதிமுகவில் 95 சதவீதம் பேர் பழனிசாமிக்கு ஆதரவு அளித்து உள்ளனர். தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து விலகிச் செல்ல வேண்டும். பன்னீர்செல்வமாக இருந்த ஓபிஎஸ் தற்போது கண்ணீர் செல்வமாக மாறி உள்ளார். ஓபிஎஸ்ஸை பல காலம் ஒதுக்கி வைத்தவர் ஜெயலலிதா.

ஓபிஎஸ்ஸுக்கு எதிராக எந்த சதிவலையும் பின்னப்படவில்லை. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தனது தொகுதி மேம்பாடு குறித்து முதல்வரை சந்தித்ததை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. திமுக அரசை அவர் பாராட்டவும் செய்தார். கே.பழனிச்சாமிதான் அதிமுகவின் பொதுச்செயலாளர். ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஓபிஎஸ்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.