கேரளாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 31 முதல் ஏப்ரல் 29 வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 15-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. கேரளாவில் இம்முறை தேர்ச்சி சதவீதம் 99.26 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் 0.21 சதவீதம் குறைவு ஆகும்.
தேர்வு எழுதிய மாணவர்களில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 469 பேரில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 303 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 44 ஆயிரத்து 363 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ + மதிப்பெண் பெற்றுள்ளனர். மலப்புரம் மாவட்டம் ஏ+ மாணவர்கள் 3 ஆயிரத்து 024 பேருடன் முதலிடத்தில் உள்ளது. கண்ணூர் 99.76 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில், கேரள மாநிலம் பத்தனம் திட்டா, கொடுமண் பகுதியைச் சேர்ந்த ஜிஷ்ணு என்ற மாணவன் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதிய நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், தான் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வகையில், தனக்கு தானே பிளக்ஸ் போர்டு ஒன்றைத் தயார் செய்து சாலையோரம் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாணவரின் இந்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவன் கூறுகையில், பள்ளி நிர்வாகம் சார்பாக முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு பிளக்ஸ் போர்டுகளை பள்ளி முன்பு வைகின்றனர். ஆனால், அனைவருக்கும் வைப்பது இல்லை, பாஸ் செய்ய நாங்கள் படும் பாடு எங்களுக்குத்தான் தெரியும். அடுத்த ஆண்டுக்கான மாணவர்களுக்கான சேர்க்கையை நிரப்பத்தான் அவர்கள் பிளக்ஸ் போர்டுகளை வைக்கிறார்கள். எங்களை யாரும் கண்டுகொள்வது இல்லை எனக் கூறியுள்ளார்.