புதுடில்லி: சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி.,யில் இருந்து புற்றுநோய் மருந்துகளுக்கு விலக்கு அளிக்கும்படி பார்லி., குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையிலான அதிகாரிகள், பார்லி., குழு முன் ஆஜராகி பல்வேறு யோசனைகளை தெரிவித்தனர்.
இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: புற்றுநோயை அறிவிக்கப்பட்ட நோயாக அரசாணை வெளியிட வேண்டும் என, மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள், பார்லி., குழுவிடம் தெரிவித்தனர். இதனால் புற்றுநோய் மற்றும் நோயாளிகளின் விபரங்களை அனைத்து மருத்துவமனைகளும் அரசுக்கு கட்டாயம் தெரிவிக்க நேரும். இதன் வாயிலாக புற்றுநோய் பாதிப்பு, நிவாரணம் உள்ளிட்ட விபரங்களை சுலபமாக அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும். புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சை கட்டணத்தையும் அரசே நியாயமாக நிர்ணயிக்கலாம் என, யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement