அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 65 தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுக பொருளாளர் பொறுப்பிலிருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்கி விட்டு, புதிய பொருளாளராக கேபி முனுசாமியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டால், தனது கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். பொதுக்குழுவுக்கான இடம் தேர்வு, ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.