புதுடெல்லி: ராணுவம், கடற்படை, விமானப்படையில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னி பாதை திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்று சத்தியாகிரகம் போராட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மோகன் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:
இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அக்னி பாதை திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். புதிய திட்டத்தால் நாட்டின் பாதுகாப்பை பாஜக அரசு பலவீனப்படுத்தி வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவது மத்திய அரசின் கடமை. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு ராணுவத்தில் சேர காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. புதிய திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். முப்படைகளிலும் 1.25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும்.
அக்னி பாதை திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் பிரதமர் நரேந்திர மோடியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பிடிவாதத்தை கைவிட்டு, இளைஞர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும். இந்த திட்டம் வாபஸ் பெறப்படாவிட்டால் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.