சென்னை: ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்துவது குறித்தும், அதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும், பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பெயரில் நேற்று முன்தினம் இரவு வெளியான அறிவிப்பில், கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் ஜூன் 27-ல்(நேற்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, ‘ஒருங்கிணைப்பாளராக நான் எந்த ஒப்புதலையும் இக்கூட்டத்துக்கு அளிக்காததால், இதில் எடுக்கப்படும் முடிவுகள் நிர்வாகத்தில் உள்ளவர்களையும், கட்சியையும் கட்டுப்படுத்தாது’ என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டார்.
எனினும், நேற்று காலை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமை நிலையச் செயலாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒன்றரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், ஜூலை 11-ல் நடக்கஉள்ள கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
இக்கூட்டத்தில் பழனிசாமி பல அறிவுறுத்தல்களை வழங்கினார்.‘‘ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்ட சூழலில், தலைமைக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் இணைந்து ஜூலை 11-ம் தேதி கூட்டத்தை நடத்தி, உரிய முடிவு எடுக்கலாம்.
ஓபிஎஸ் உள்ளிட்டோரின் பதவி பறிக்கப்பட உள்ளதாக பேசிக் கொள்கின்றனர். அவ்வாறு செய்வதில் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. அதை நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’’ என்று பழனிசாமி கூறினார். இவ்வாறுநிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டம் முடிந்த பிறகு, மீண்டும்பழனிசாமி, கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பொதுக் குழுவை எங்கு நடத்துவது என்றும் ஆய்வு நடத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புகள் காலாவதியாகி விட்டன. கட்சியில் 74 நிர்வாகிகள் உள்ளநிலையில், இன்று அவைத் தலைவர் தலைமையில் கூட்டத்துக்கு 65 தலைமைக் கழக நிர்வாகிகள் வந்தனர். 4 பேர் வர இயலவில்லை என்று கடிதம் அளித்துள்ளனர்.
பண்ருட்டி ராமச்சந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், புத்திசந்திரன் உள்ளிட்ட 5 பேர் உடல்நிலை சரியில்லாததால் வரவில்லை.
வரும் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழை தபாலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது’’ என்றார்.
ஓபிஎஸ் படம் கிழிப்பு
அதிமுக தலைமை அலுவலக வளாகத்தின் இருபுறமும் பல்வேறு அணிகள் சார்பில், ஜெயலலிதா, ஓபிஎஸ், பழனிசாமி படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று ஓபிஎஸ்ஸுக்குஎதிராகவும், பழனிசாமிக்கு ஆதரவாகவும் தொண்டர்கள் கோஷமிட்டனர். அப்போது, ஒருவர் சுவரில் ஏறி, மகளிர் அணி வைத்த பேனரில் இடம்பெற்றிருந்த ஓபிஎஸ் படத்தை மட்டும் கிழித்து எறிந்தார்.
இதையடுத்து, அங்கு வந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், அதிமுக அலுவலக செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் அவரை தேடினர். விரைவில் அதே பேனர் அங்கு வைக்கப்படும் என்று கூறிவிட்டுச் சென்றனர். அதேபோன்ற புதிய பேனர் நேற்று மாலையில் அங்கு வைக்கப்பட்டது.