கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் படிப்புக்கான ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடங்கியது.
இதுதொடர்பாக, துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் கோவை, மதுரை, மேட்டுப்பாளையம், திருச்சி, தேனி, கிள்ளிக்குளம் உள்ளிட்ட 8 கல்லூரிகளில் 32 துறைகளில் எம்.எஸ்.சி. முதுநிலை பட்டப்படிப்பும், 28 துறைகளில் முனைவர் (பி.ஹெச்டி) பட்டப்படிப்பும் கற்பிக்கப்படுகின்றன.
இரண்டாண்டுகளை கொண்டமுதுநிலை பட்டப் படிப்பில் 400இடங்களும், மூன்றாண்டுகளை கொண்ட முனைவர் பட்டப்படிப்பில் 200 இடங்களும் உள்ளன. நடப்புகல்வியாண்டு முதுநிலை மற்றும்முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை தொடங்கியுள்ளது. https://admissionsatpgschool.tnau.ac.in இணையதளம் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
இளங்கலை, முதுநிலை படித்துமுடித்த மாணவர்கள் ப்ரொவிஷனல் சான்றிதழ் மூலமாகவும், தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் அல்லது கல்லூரி முதல்வர்களிடம் இருந்து படிப்பு முடிவுற்ற சான்றிதழ் (கோர்ஸ் கம்ப்ளீஷன் சான்றிதழ்) பெற்றும் விண்ணப்பிக்கலாம். எனினும், அவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தப்படும்.
மாணவர் சேர்க்கைக்கான பிரத்யேக இணையதள பக்கம் ஆகஸ்ட் 8-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை இயங்கும். கரோனா காரணமாக கடந்தாண்டுகளில் மாணவர் சேர்க்கை தள்ளிப்போனது. நடப்பாண்டு உரிய நேரத்தில் சேர்க்கை நடத்தி முடிக்கப்படும்.
ஆகஸ்ட் 27-ம் தேதி மாதிரித் தேர்வு, 28-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படும். மாதிரித் தேர்வு என்பது மாணவர்கள் அசல் நுழைவுத் தேர்வை எழுதுவதற்கான பயிற்சி. நுழைவுத்தேர்வு பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படும்.
செப்டம்பர் 2-ம் வாரம் சேர்க்கை தொடர்பான பணிகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டுவிடும். செப்டம்பர் 3-வது வாரம் மாணவர்கள் கட்டணம் செலுத்தி படிப்புகளில் சேர்ந்து கொள்ள வேண்டும். அக்டோபர் முதல் வாரம் வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.