புதுக்கோட்டை, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் அனிதா. இவர் அதே பகுதியில் சிறிய மளிகைக் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். தனது, கடையை சற்றே விரிவுபடுத்துவதற்காக சின்னப்பா நகர் இரண்டாம் வீதியைச் சேர்ந்த இந்திராணி என்ற பெண்மணியிடம் கடந்த 20.10.2021-ம் தேதி ஒரு லட்ச ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார்.
அதற்காக அனிதா இந்திராணியிடம், தனது இடத்துப் பத்திரம், வங்கி காசோலை மற்றும் 100 ரூபாய் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து உள்ளிட்டவற்றை பிணையாக கொடுத்திருக்கிறார்.
ஒரு லட்சம் ரூபாய்க்கு 8,000 வட்டி என எடுத்துக்கொண்டு 92 ஆயிரம் ரூபாயை அனிதாவிடம் இந்திராணி கொடுத்துள்ளார். முதலில் மாதம் ரூ.8,000 என வசூலித்துள்ளனர்.
ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே பணத்தை உடனடியாக கட்டுமாறு இந்திராணி, அனிதாவுக்கு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, உடனடியாக அனிதாவால் மொத்த தொகையையும் கொடுக்க முடியாத நிலையில் மாத வட்டி, தின வட்டியாக மாற்றியிருக்கிறஇது.
ஒரு கட்டத்தில் 97 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை வட்டியாக மட்டுமே அனிதா கொடுத்துள்ளார். அசல் அப்படியே இருந்துள்ளது. அடுத்து தினசரி வட்டி என இப்படியே தொடர்ந்து அனிதாவை மிரட்டி கடந்த மாதம் வரையிலும் 6 லட்சத்து 70ஆயிரம் ரூபாயை வட்டியாக இந்திராணியும் அவரின் மகன்கள் மூலம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் வட்டி கட்ட முடியாத அனிதாவுக்கு தொடர்ந்து இவர்கள் டார்ச்சர் கொடுத்ததால், கடந்த 15-ம் தேதி தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
இதன் பிறகு அவரின் கணவர் ராஜா உள்ளிட்டோர் இதுகுறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த கணேஷ் நகர் போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் சம்மந்தப்பட்ட இந்திராணி அவரின் மகன் மணிகண்டன், மகள் பூப்பாண்டி மற்றும் அசோக் நகரைச் சேர்ந்த ராதா காமராஜபுரத்தை சேர்ந்த ஹரி அவரின் மனைவி சித்ரா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இதில் முதல் குற்றவாளியான இந்திராணி மற்றொரு கந்து வட்டி வழக்கில் கணேஷ் நகர் போலீஸாரால் கடந்த 20-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கந்துவெட்டி கும்பல் இளம்பெண்ணிடம் மீட்டருக்கு மீட்டர் வட்டி என வசூலித்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.