சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சந்துரு தலைமையிலான ஆய்வுக்குழு, ‛ஆன்லைன் விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், முறைப்படுத்த இயலாது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும்’ என தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான சூதாட்ட விளையாட்டுகளில் பொது மக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழப்பதுடன், அதன் காரணமாக கடன் தொல்லை மற்றும் கடும் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். இதனால் பல்வேறு சமூக பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்வதால் அத்தகைய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இவ்விளையாட்டுகளினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த ஆய்வுக்குழு தெரிவிக்கும் அறிக்கையில் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 71 பக்க அறிக்கையினை நேற்று (ஜூன் 27) தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் lீதிபதி சந்துரு தலைமையிலான ஆய்வுக்குழு அளித்தது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், ‛பொதுமக்களின் உடல்நலம் இந்த விளையாட்டுகளால் பாதிக்கப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டுத் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தைக் கைவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தேசிய அளவில் ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுகிறது. முறைப்படுத்த இயலாது என்பதால் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்.’ என ஆய்வுக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
Advertisement