நேற்று தமிழக முதலமைச்சரிடம் இணையதள விளையாட்டுகளை தடை செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கொடுத்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த 71 பக்க அறிக்கையில் ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுகிறது என சொல்லப்படுவது தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பிற முக்கிய விவரங்கள்: “கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்துள்ளனர். பொதுமக்களின் உடல் நலம் இந்த விளையாட்டுக்களால் பாதிக்கப்படுகிறது. மேலும் இயல்பு நிலையில் வாழ்வதற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன. இந்திய அரசியல் சாசனம் 252 பயன்படுத்தி மத்திய அரசு தேசிய அளவில் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தமிழக அரசு மேல்மறையீடு செய்யலாம். ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது இயலாத ஒன்று என்பதால் அதை முழுவதுமாக தடை செய்ய வேண்டும். ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தை கைவிட்டுவிட்டு புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்” என்றுள்ளன. இவ்விவரங்களுடன் அறிக்கை சமர்பிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் இந்த கமிட்டியின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் அறிக்கை தொடர்பாக பல்வேறு அரசுத் துறைகள் மூலமும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது.
தொடர்புடைய செய்தி: ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் வருகிறது அவசர சட்டம்?
இந்த விளையாட்டுகள் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பது பற்றிய விவரங்களும் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் `இந்த நிறுவனங்கள் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே செயல்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் இதற்காக அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பிக்கலாம் எனவும் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM