கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய, அவர், “கல்வி, அதிகாரம் மற்றும் வளங்கள் இவையனைத்தும் எந்த ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு சொந்தமானது கிடையாது. சாதி அமைப்புக்குக் காரணமானவர்கள் இப்போது இடஒதுக்கீடு முறையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் நலனைப் பாதுகாக்க சமூகத்தில் சாதி அமைப்பு தொடங்கப்பட்டது.
ஆனால் சூத்திரர்களின் பெரும் பகுதி மக்களுக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டதும், வாய்ப்பும் மறுக்கப்பட்டதும் அநீதி அல்லவா? இடஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல. இடஒதுக்கீடு என்பது நமது அரசியல் சாசன உரிமை. நீண்ட காலமாக அமைதியாக இருந்தோம். இன்னும் அமைதியாக இருந்தால் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாது. சுயமரியாதை இருந்தால்தான் நாம் மரியாதையாக வாழ முடியும்’ என்றார்.