Tamil nadu cabinet decides to ban online rummy Tamil News: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளால் பலரும் ஈர்க்கப்பட்டு விளையாடி வருகின்றனர். ஆனால் சிலர் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி, அதிக பணத்தை வைத்து விளையாடுகின்றனர். இதில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பல்வேறு சமூகப் பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இதைப் பல்வேறு சமூக அமைப்புகள் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தன.
இந்நிலையில், கடந்த 10-6-2022 அன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இது போன்ற விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வும், அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திடவும் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படுவதாக அறிவித்தார்
அந்த குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுனர் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் இயக்குனர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த குழு இரண்டு வாரங்களுக்குள் அதன் பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், இக்குழுவினர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தனர்.
அந்த அறிக்கையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தை கைவிட்டு, புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.” என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கொடுத்த அறிக்கையில் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நேற்று மாலை 6.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், துரைமுருகன், நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம், தொழில்துறைச் செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரவு 7.55 மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை விவாதிக்கப்பட்டு, விளையாட்டை தடை செய்வதற்கான அவசரச் சட்டம் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து முந்தைய அதிமுக அரசு இயற்றிய சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும், கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து திமுக அரசு தொடர்ந்த மனு நவம்பர் மாதம் முதல் நிலுவையில் உள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil