பெங்களூருவைச் சேர்ந்தவர் தேஜ் மண்டல். மாற்றுத்திறனாளியான இவர், சேலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் வீட்டில் வாடகைக்கு தங்கிக்கொண்டு சேலத்தில் அழகாபுரம், பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய இடங்களில் ஸ்பா மாசாஜ் சென்டர் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2021 அக்டோபர் 15-ம் தேதி, தான் தங்கியிருந்த வீட்டுக்குள் சூட்கேஸில் மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
இது குறித்து அஸ்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தேஜ் மண்டலின் மசாஜ் சென்டரில் வங்க தேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வேலை பார்த்து வந்ததும், அவர்கள் தற்போது தலைமறைவாக இருந்து வருவதால், கொலைசெய்துவிட்டு தப்பியிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. அதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து அந்தப் தொடங்கினர். இதற்கிடையில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் செல்போனில் உள்ள எண்களை வைத்து டிராக் செய்ததில், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்பவர் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. அதனால் அந்த நபரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேஜ் மண்டல் கொலைசெய்யப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமலே சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து வருகிறது.
இது குறித்து சேலம் மாநகர துணை ஆணையர் மாடசாமியிடம் பேசியபோது, “இறந்துப்போன பெண்னின் உறவினர்கள் சேலத்தில் யாரும் இல்லை. எங்களுடைய விசாரணையில் அவருடைய சகோதரர் வெளிநாட்டில் இருப்பதாகத் தெரியவந்தது. அதன்மூலம் அவருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, அவர் வருவதற்கான டிக்கெட் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் அவருடைய சகோதரர் வந்தவுடன் அந்தப் பெண்ணின் உடல் அவரிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.