திருமலை : ஆந்திர மாநிலம் விஜயவாடா சுங்கத்துறை அதிகாரிகள் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட கும்பலிடம் இருந்து 3 கார்களில் கடத்தி வரப்பட்ட ₹5.80 கோடி மதிப்புள்ள 10.77 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த 24ம் தேதி சென்னையில் இருந்து குண்டூர், ராஜமுந்திரிக்கு அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சோதனை மேற்கொண்டு வந்தனர்.அப்போது பொல்லப்பள்ளி சுங்கச்சாவடியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கார்கள் மற்றும் கார்களின் இருக்கைகளுக்கு கீழ் சிறப்பு அலமாரிகளில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த சோதனையில் 3 கார்களில் இருந்து ₹5.80 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. காக்கிநாடா பிரிவு சுங்க அதிகாரிகள் ராஜமுந்திரியில் தலா ஒரு கிலோ எடையுள்ள 24 வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த தங்கம் மற்றும் வெள்ளியின் மீது வெளிநாட்டு அடையாள முத்திரைகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கம் மற்றும் வெள்ளி கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு சிறப்பு நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2014-ம் ஆண்டு விஜயவாடா சுங்கத்துறை ஆணையரகம் அமைக்கப்பட்டதில் இருந்து தற்போது, கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கடத்தல் வழக்கு இதுவாகும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.