நான் ஐந்து நட்சத்திர ஹொட்டலில்தான் தங்குவேன் என பெருமையடித்துக்கொள்ளும் கூட்டமும் உண்டு, என்னால் அந்த ஹொட்டலில் நிம்மதியாக தூங்கவே முடியவில்லை என குறைபட்டுக்கொள்ளும் கூட்டமும் உண்டு.
சுவிட்சர்லாந்திலோ பூஜ்ய நட்சத்திர ஹொட்டல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்த ஹொட்டலுக்கு சுவர்களோ கூரையோ கிடையாது!
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Saillon கிராமத்தில் இந்த ஹொட்டல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உருவாக்கியுள்ள இரட்டையர்களான Riklin சகோதரர்கள், இந்த ஹொட்டல் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் ஒரு பெரிய நோக்கம் உள்ளது என்கிறார்கள்.
ஆம், தங்களுக்கு எவ்வளவு வசதிகள் இருந்தாகும், சின்னச் சின்ன விடயங்களுக்குக் கூட மக்கள் குறைபட்டுக்கொள்ளும் நிலையில், உலகில் நிலவும் பருவநிலை மாற்றம், போர், தங்களுக்கு இருக்கும் விடயங்கள் குறையற்றதாக இருக்கவேண்டும் என்பதற்காக மனிதர்கள் பூமிக்கு ஏற்படுத்தும் சேதம் முதலான மற்ற பெரிய பிரச்சினைகளைக் குறித்தும் மக்கள் சிந்திக்கவேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த ஹொட்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
அறைகள் இல்லாத இந்த ஹொட்டலில், இருவர் படுக்கும் வசதி கொண்ட ஒரு கட்டில், இரண்டு நாற்காலிகள் மற்றும் இரண்டு மேஜை விளக்குகள் மட்டும் இருக்கும். காலை உணவும், பானங்களும் உண்டு. ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் 325 சுவிஸ் ஃப்ராங்குகள்.
இந்த திட்டம் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல், செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.