மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூன் 29ஆம் தேதியன்று செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும், ஜூன் 30ல் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அம்மையம் கணித்துள்ளது.
மேலும், குமரிக்கடல், கர்நாடக, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.