அறநிலையத் துறை தூங்கிக் கொண்டிருக்கிறது! சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்

சென்னை: கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அறநிலையத் துறை தூங்கிக் கொண்டிருக்கிறது என சென்னை விமர்சித்த நீதிமன்றம் அறநிலையத்துறை அதிகாரிகளை கடுமையாக சாடியது.

பொன்னேரியில் உள்ள பிரபலமான காளத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 18.72 ஏக்கர் நிலம் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள நிலையில்,  ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அந்த பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டது. தீர்ப்பில், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், அந்த நிலம் இதுவரை மீட்கப்படவில்லை என கூறி, சீனிவாசன் மீண்டும்,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்தவழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கு தொடர்பான கோயிலுக்கு சொந்தமான 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 14 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கோரினார். மேலும், தமிழகத்தில் தற்போது வரை 1100 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டிருக்கிறது என்று கண்டனம் தெரிவித்ததுடன்,  ஆக்கிரமிப்புகளை அரம்பத்திலேயே தடுத்த நிறுத்த வேண்டிய இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெறும் ஊதியத்தை மட்டும் பெற்றுக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கடுமையாக விமர்சித்தனர்.

தொடர்ந்து, கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யும் வரை அறநிலையத் துறை அதிகாரி என்னதான் செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு வந்த பிறகு நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடுவது எதற்காக என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம். 50 ஆண்டு காலமாக இருக்கின்ற அக்கிரமிப்புகளை அகற்றாமல், இப்போது கடந்த ஓராண்டாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுவது ஏற்று கொள்ள முடியாது. கோயில் நில குத்தகை மூலம் வருமானம் வருவதால், அது இந்து சமய அறநிலையத்துறைக்கு பயனளிக்கும் என்பதால் தான், கோயில் நிலங்களை குத்தகைக்கு விட நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை மூன்று வாரங்கள் தள்ளிவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.