'வாங்க.. பேசி தீர்த்துக்கலாம்! – அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு முதல்வர் தாக்கரே அழைப்பு!

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். அவருடன் சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட சுமார் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்று, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், விரைவில் மும்பைக்கு செல்ல உள்ளதாக, சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். மும்பைக்கு வரும் அவர்கள், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை சபாநாயகரை நேரில் சந்தித்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மாநில அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு, அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்து உள்ளதாவது:

நீங்கள் (அதிருப்தி எம்எல்ஏக்கள்) சில நாட்களாக கவுகாத்தியில் சிக்கி உள்ளீர்கள். உங்களைப் பற்றிய செய்திகளை நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். உங்களில் பலர் எங்களுடன் தொடர்பில் உள்ளீர்கள். நீங்கள் சிவசேனா கட்சியிவின் இதயப்பூர்வமானவர்கள். நாம் ஒன்றாக அமர்ந்து பேசி ஒரு தீர்வைக் காண்போம்.

நான் உங்களிடம் முறையிட விரும்புகிறேன். இன்னும் நேரம் வீணாகவில்லை. தயவு செய்து வாருங்கள். பொது மக்களின் மனதில் இருக்கும் அனைத்து சந்தேகங்களையும் நீக்குங்கள். பிறகு நாம் ஒரு வழியைக் காணலாம். நாம் ஒன்றாக அமர்ந்து பேசி ஒரு வழியைக் காணலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.