சென்னை: தமிழகத்தில் தினசரி 25,000 கரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் ரத்த தானம் வழங்கும் முகாம், மருத்துவ மாணவர்கள் பேரவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இங்கு 341 மாணவர்கள் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்து இருக்கிறார்கள்.
கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களில் 2, 3 மடங்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை படிபடியாகத் தான் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 25 ஆயிரம் பேருக்கு நாள் ஒன்றுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை தற்போது செய்து வருகிறோம். சென்னையில் 207 தெருக்களில் 3-க்கும் மேற்பட்டவர்கள், 187 தெருக்களில் 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு உள்ளது.
சென்னையில் 51 பேர் அரசு மருத்துவமனையிலும், 85 பேர் தனியார் மருத்துவமனையிலும் என 136 பேர் மொத்தமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் முகக்கவசம் அணிவதில் இருந்து எந்த விதி விலக்கும் அறிவிக்கப்படவில்லை. தற்போது சென்னையில் பல இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. நாளை மயிலாப்பூர் லஸ் கார்னரில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 50,000 பேருக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நானும் துறைச் செயலாளரும் கலந்து கொள்கிறோம்.
ஒரு சில மருத்துவ சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்து உள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. அரசுக்கும் மருத்துவ சங்கங்களுக்கும் இடையேயான பிரச்சினை இது கிடையாது. மருத்துவ சங்கங்களுக்குள் நடைபெறும் பிரச்சினை இது. 4000-க்கும் மேற்பட்டவர்களுக்கு எம்.ஆர்.பி மூலம் பணி வழங்கவுள்ளோம். கரோனா காலகட்டத்தில் பணியில் ஈடுபட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.