சிவசேனாவிலிருந்து 40-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுஹாத்தி ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை கட்சிக்கு மீண்டும் அழைக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முயற்சி மேற்கொண்டு வருகிறார். அஸ்ஸாமிலுள்ள எம்.எல்.ஏ-க்களில் 20 பேர் தங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்று சிவசேனா கூறி வருகிறது. இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தவ் தாக்கரே உணர்ச்சிப்பூர்வமாக கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில், “குடும்பத்தின் (சிவசேனா) தலைவர் என்ற முறையில் உங்களை நினைத்து கவலைப்படுகிறேன். நீங்கள் பல நாள்களாக அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களைப்பற்றி ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. உங்களில் பலர் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். நீங்கள் இன்னும் சிவசேனாவின் இதயத்தில் இருக்கிறீர்கள். அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் உறவினர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்கின்றனர். உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். என் மனதிலிருந்து சொல்கிறேன். இன்னும் தாமதமாகிவிடவில்லை. வாருங்கள் என்னுடன் அமர்ந்து பேசுங்கள். சிவசேனா தொண்டர்களின் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம். நாம் அமர்ந்து பேசி தீர்வு காணலாம். சிவசேனா உங்களுக்கு மரியாதை கொடுக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே இந்தப் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சரத் பவார் மகள் சுப்ரியா சுலே, “நான் கேள்விப்பட்டவரை ஏக்நாத் ஷிண்டேவிடம் 50 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். அவர்களிடம் ஆட்சியமைக்க 144 எம்.எல்.ஏ-க்கள் இல்லை. அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புபவர்களுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்புகிறது. இது போன்ற நடைமுறை நாட்டுக்கும், அரசியல் சாசனத்துக்கும் நல்லதல்ல” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதாக கூறி உத்தவ் தாக்கரே, அவர் மகன் ஆதித்ய தாக்கரேமீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என்றுகூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் இரண்டு பேர் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.