பண மோசடி தொடர்பாக மூலனூர் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாராபுரம் அருகே, 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், மூலனூர் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், ஒருவரை கைது செய்துள்ளனர். குடும்பத்துடன் தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகரை தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் பெரியசாமி மற்றும் அவரது மகன் ஏ.P.பெரியசாமி ஆகியோர் கோழித்தீவன ஆலையை நடத்தி வந்தனர். இந்த ஆலைக்கு மக்காச்சோளம், கருவாடு உள்ளிட்ட மூலப்பொருட்கள் வழங்கிய வகையிலும், கடன் கொடுத்த வகையிலும் 80 லட்சத்து 71 ஆயிரம் ரூபாயை தராமல் ஏமாற்றியதாக திருப்பூர் பொல்லிகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்..
இது குறித்து விசாரணை நடத்திய மூலனூர் போலீசார், அதிமுக பிரமுகர் பெரியசாமி, அவரது மகன் ஏP.பெரியசாமி, மருமகள் உமாமகேஸ்வரி, உறவினர் ஷ்யாம், பெரியசாமியின் நண்பர் பவானி முரளிதரன், அவரது மனைவி பிரபாவதி ஆகிய 6 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில் முரளிதரனை மூலனூர் போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM