கொரோனா முதல், தொடர்ந்து பல்வேறு நோய்கள் பிரித்தானியாவைத் தாக்கிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக X நோய் என்னும் ஒரு நோய் பிரித்தானியாவைத் தாக்கலாம் என்றும், அரசு அதை எதிர்கொள்ளத் தயாராகுமாறும் சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சமீபத்தில் பிரித்தானியாவில் கழிவுநீர் மாதிரிகளில் குழந்தைகளை தாக்கி நிரந்தரமாக கை கால்களை செயலிழக்கச் செய்துவிடும் பயங்கர நோயான போலியோவை உண்டாக்கும் வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரணம், போலியோ, பெரியம்மை போன்ற நோய்களை நாம் ஒழித்துவிட்டோம் என எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுப்பொருட்களில் அவை காணப்படுமானால், அவை எங்கோ சுற்றிக்கொண்டிருக்கின்றன என்று அர்த்தம். அதனால்தான் மருத்துவ உலகமே பரபரப்படைந்தது.
சிறிது முன்புதான் பிரித்தானியா குரங்கம்மைத் தொற்றால் பரபரப்பாகியது. ஜூன் 23வரை பிரித்தானியாவில் 910 பேருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில், Crimean-Congo haemorrhagic fever என்னும் ஒரு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் Lassa fever என்னும் நோயையும், பறவைக் காய்ச்சலையும் சந்தித்தது பிரித்தானியா.
கொள்ளைநோய்களின் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று கூறும் மருத்துவ நிபுணர்கள், அடுத்து X நோய் என்னும் ஒரு நோய் பிரித்தானியாவைத் தாக்கலாம் என்கிறார்கள்.
இந்த X நோய் என்பது, இதுவரை மனித இனம் கண்டிராத பயங்கரமான ஒரு நோய்க்கிருமியால் உருவாகும் ஒரு சர்வதேச தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.