சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்ட முயன்றதாக காவல்துறையிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டார்.
144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது, தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நோய் பரவ காரணமாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ராயபுரம் காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாகவும், அதனை தட்டிக் கேட்டபோது தாக்குதல் மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் திமுகவினர் ஈடுபட்டதாக காவல்துறைக்கு புகார் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், காவல்துறையினர் திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் தங்கள் மீது வழக்கு பதிவு செய்ததால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.